Published : 21 Aug 2025 02:39 PM
Last Updated : 21 Aug 2025 02:39 PM
சென்னை: பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் வழக்கில் சிக்கி 30 நாட்கள் சிறையில் இருந்தால் அவர்களை நீக்கம் செய்வதற்கான சட்டமசோதா நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை,மக்கள் பிரச்சினையை திசை திருப்ப தாக்கல் செய்துள்ளார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக செய்துள்ளார்கள் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்களை வெளியிட்டு ஆற்றிய உரையில் முதல்வர் இவ்வாறாக தெரிவித்தார்.
முதல்வர் பேசியதாவது: நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் உள்துறை அமைச்சர்.
இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி கடுமையாக எதிர்ததோ, அதேபோல இந்த கருப்பு சட்டத்தை எதிர்ப்போம்.
இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள். மக்கள் பிரச்சனையை திசை திருப்ப செய்கிறார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக அதை செய்கிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னதாக நேற்று மசோதா தாக்கலானவுடனேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதில், “இந்த, 130-வது அரசியல் சட்டத்திருத்தம் என்பது சீர்திருத்தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்சட்டம். 30 நாள் கைது என்றால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரை எந்த விசாரணையும், நீதிமன்றத் தண்டிப்பும் இல்லாமலேயே பதவி நீக்கம் செய்யலாம். பாஜக வைத்ததுதான் சட்டம்..
பிரதமருக்குக் கீழான சர்வாதிகார நாடாக இந்தியாவை மாற்றுவதன் மூலம் மத்திய பாஜக அரசு அரசியலமைப்புச் சட்டத்தையும் அதன் மக்களாட்சி அடித்தளத்தையும் களங்கப்படுத்த முடிவெடுத்துவிட்டது.” என்று கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT