Published : 21 Aug 2025 01:40 PM
Last Updated : 21 Aug 2025 01:40 PM
சென்னை: மதுரையில் நடைபெறும் தவெகவின் 2-வது மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் என லட்சக்கணக்கானோர் குவிந்துள்ள சூழலில், திட்டமிட்ட நேரத்துக்கு முன்கூட்டியே மாநாடு தொடங்கும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார். அதற்கேற்ப ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மேடைக்கு வந்துவிட்டனர்.
தவெகவின் 2-வது மாநாடு மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டதால், கட்சி சார்பில் அதற்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தன. இந்நிலையில், மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் ஆகியவை விநியோகம் செய்யப்படுகிறது.
மாநாட்டை மாலை 4 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்தனர். ஆனால், தொண்டர்கள் வருகை அதிகரித்துள்ளதால், தற்போது மாநாட்டை முன்கூட்டியே நடத்த திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் சரியாக 3 மணிக்கு மாநாடு திடலுக்கு விஜய் வருவார் என்று பொதுச் செயலாளர் ஆனந்த் அறிவித்துள்ளார்.
10 பேர் மயக்கம்: மதுரை தவெக மாநாட்டுத் திடலில் குவிந்த தொண்டர்களால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு மாநாட்டில் அமைக்கப்பட்ட மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. பெரும்பாலான நபர்கள் தங்களது குழந்தைகளுடன் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்துள்ளனர்.
மாநாடு நடைபெறும் பகுதியில் வெயில் கொளுத்தும் நிலையில், ராட்சத ட்ரோன் மூலமாக மாநாட்டு திடல் முழுவதும் தண்ணீர் தெளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ட்ரோன்கள் மூலம் தொண்டர்களுக்கு குடிநீர் பாட்டில்கள், ஸ்நாக்ஸ் ஆகியவை விநியோகம் செய்யப்படுகிறது.
பாரபத்தியில் நடைபெறும் தவெக மாநாட்டுக்காக வாகனங்கள் அதிகளவில் வந்து கொண்டிருக்கின்றன. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் அணி வகுத்து நிற்கின்றன. அதேபோல், தவெகவுக்காக, விஜய்க்காக வித்தியாசமான முறையில் மாநாட்டுக்கு இளைஞர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருச்சியிலிருந்து வந்த ஒரு தவெக தொண்டர் சிறிய சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்து கவனம் ஈர்த்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT