Published : 21 Aug 2025 06:13 AM
Last Updated : 21 Aug 2025 06:13 AM
மதுரை: தவெக மாநில மாநாடு நடைபெற உள்ள திடலில் 100 அடி உயர கொடிக்கம்பத்தை நேற்று அமைக்க முயற்சித்தபோது எடை தாங்காமல் சரிந்து விழுந்தது. அருகில் இருந்தவர்கள் விலகி ஓடியதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
மதுரை அருகே பாரப்பத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு இன்று நடைபெற உள்ளது. கட்சித் தலைவர் விஜய் கொடியை ஏற்றுவதற்காக 100 அடி உயர கொடிக் கம்பத்தை மேடை அருகே அமைக்கத் திட்டமிட்டு, ஆழமான குழிதோண்டி கான்கிரீட் அமைப்பை ஏற்படுத்தும் பணி நடைபெற்றது.
நேற்று அதன் மீது ஒரு டன் எடை கொண்ட கொடிக்கம்பத்தை பொருத்தும் பணி தொடங்கியது. கிரேன் உதவியுடன் கம்பத்தை தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, திடீரென சரிந்து விழுந்தது. உடனே அப்பகுதியில் நின்றுகொண்டிருந்தவர்கள் உடனடியாக விலகி ஓடியதால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். வேகமாக சரிந்த கம்பம், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆளில்லாத கார் மீது விழுந்தது. இதில் காரின் மேற்பகுதி சேதமடைந்தது.
தகவலறிந்து உடனடியாக வந்த போலீஸார், இதுகுறித்து விசாரணை நடத்தினர். கொடிக்கம்பத்தை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து கொடிக்கம்பம் அகற்றப்பட்டது. இன்று மாநாடு நடைபெற உள்ள நிலையில், வேறொரு கொடிக் கம்பத்தை அமைப்பது தொடர்பாக கட்சி நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, “மாநாடு முடிவடைந்த பிறகும், அதே இடத்தில் 100 அடி கொடிக் கம்பத்தில் கட்சிக் கொடியை 5 ஆண்டுகளுக்கு பறக்கவிட நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக அந்த நிலத்தின்உரிமையாளரிடம் ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர். இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு உடன் பாடு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவசர அவசரமாக கொடிக் கம்பத்தை அமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். அதிக எடை தாங்காமல் கம்பம் சரிந்து விழுந்ததாகத் தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்று கூறினர்.
தொண்டர்கள் குவிந்தனர்: இதற்கிடையே, மாநாடு இன்று நடைபெற உள்ள நிலையில் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். மாநாடு பிற்பகல் 3 மணிக்கு மேல் தொடங்கி இரவு 8 மணி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதலில் கட்சிக் கொடி ஏற்றுதல், அதைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்து, தீர்மானங்கள் நிறைவேற்றுதல், விஜய் உரை, நன்றியுரை என நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டுள்ளது.
விஜய் மதுரை வருகை: மாநாட்டில் பங்கேற்பதற்காக விஜய், மதுரைக்கு நேற்று மாலை காரில் வந்தார். பின்னர் ஓட்டலில் தங்கிய அவர், கட்சி நிர்வாகிகளு டன் ஆலோசனை நடத்தினார்.
பிளக்ஸ் பேனர் வைத்த கல்லூரி மாணவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இனாம் கரிசல்குளத்தைச் சேர்ந்தவர் காளியப்பன் மகன் காளீஸ்வரன் (19). இவர், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவிலில் உள்ள தனியார் கல்லூரியில் விஸ்காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.
விஜய் ரசிகரான காளீஸ்வரன், மாநில மாநாட்டுக்கான பிளக்ஸ் பேனர் வைக்க தனது நண்பருடன் சேர்ந்து இரும்பு கம்பி எடுக்கச் சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு பேருந்து நிறுத்தம் அருகே உள்ள கடையில் இருந்து இரும்புக் கம்பியை எடுத்து வந்தபோது, உயர் அழுத்த மின் கம்பியில் இரும்புக் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து காளீஸ்வரன் தூக்கி வீசப்பட்டார்.
அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், காளீஸ்வரன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT