Published : 21 Aug 2025 04:56 AM
Last Updated : 21 Aug 2025 04:56 AM

பிரதமர், முதல்வர்களை நீக்கம் செய்யும் மசோதா: மக்களாட்சி அடித்தளத்தை களங்கப்படுத்தும் செயல் - முதல்வர் ஸ்டாலின்

சென்னை: பிரதமருக்​குக் கீழான சர்​வா​தி​கார நாடாக இந்​தி​யாவை மாற்​று​வதன் மூலம் மத்​திய பாஜக அரசு அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​யும் அதன் மக்​களாட்சி அடித்​தளத்​தை​யும் களங்​கப்​படுத்த முடி​வெடுத்​து​விட்​டது என்று பிரதமர், முதல்​வர், அமைச்சர்களை பதவி நீக்​கம் செய்​யும் சட்​டமசோதா குறித்து முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

பிரதமர், மாநில முதல்​வர்​கள், அமைச்​சர்​கள் வழக்​கில் சிக்கி 30 நாட்​கள் சிறை​யில் இருந்​தால் அவர்​களை நீக்​கம் செய்​வதற்​கான சட்​டமசோதா நேற்று நாடாளு​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவுக்கு எதிர்க்​கட்​சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்​நிலை​யில், முதல்​வர் ஸ்​டா​லின் வெளி​யிட்ட சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது: இந்த, 130-வது அரசி​யல் சட்​டத்​திருத்​தம் என்​பது சீர்​திருத்​தம் அல்ல, இது ஒரு கருப்பு நாள், இது ஒரு கொடுஞ்​சட்​டம். 30 நாள் கைது என்​றால், மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட முதல்​வரை எந்த விசா​ரணை​யும், நீதி​மன்​றத் தண்​டிப்​பும் இல்​லாமலேயே பதவி நீக்​கம் செய்​ய​லாம். பாஜக வைத்​தது​தான் சட்​டம்.

வாக்​கு​களைத் திருடு, எதி​ராளி​களின் குரலை நசுக்​கு, தேர்ந்​தெடுக்​கப்​பட்ட அரசுகளை ஒடுக்​கு: எல்லா கொடுங்​கோன்​மை​யும் இப்​படித்​தான் தொடங்​கும். மக்​களாட்​சி​யின் வேரிலேயே வெந்​நீர் ஊற்​றும் இத்​தகைய திருத்​தச் சட்​டத்தை நான் வன்​மை​யாகக் கண்​டிக்​கிறேன்.

இந்​தி​யா​வைச் சர்​வா​தி​கார நாடாக மாற்ற முயலும் இந்த முயற்​சிக்கு எதி​ராக ஜனநாயகச் சக்​தி​கள் அனை​வரும் ஒன்​றிணைந்து போராட முன்வர அழைக்​கிறேன். பிரதமருக்​குக் கீழான சர்​வா​தி​கார நாடாக இந்​தி​யாவை மாற்​று​வதன் மூலம் மத்​திய பாஜக அரசு அரசி​யலமைப்​புச் சட்​டத்​தை​யும் அதன் மக்​களாட்சி அடித்​தளத்​தை​யும் களங்​கப்​படுத்த முடி​வெடுத்​து​விட்​டது.

வாக்​குத் திருட்டு அம்​பலப்​படுத்​தப்​பட்ட பிறகு, மத்​திய பாஜக அரசு அமைத்​துள்ள ஆட்​சியே கேள்விக்​குள்​ளாகி​யுள்​ளது. தற்​போதைய பாஜக அரசு சட்​டப்​பூர்​வ​மானதா என்​பதே ஐயமாக உள்​ளது. தில்​லு​முல்​லுகளின் மூலம் மக்​களின் தீர்ப்​பைக் களவாடி​யுள்ள பாஜக தற்​போது அதில் இருந்து மக்​களின் கவனத்தை எப்​படி​யா​வது திசை​திருப்ப முயற்சி செய்​கிறது. அதற்​காகத்​தான், இந்த அரசி​யலமைப்பு 130-வது திருத்​தம் சட்​ட​முன்​வடிவை கொண்டு வந்​துள்​ளது.

இந்​தச் சட்​ட​முன்​வடி​வின் நோக்​கம் மிகத் தெளி​வானது. பல்​வேறு மாநிலங்​களில் ஆட்​சி​யில் உள்ள தனது அரசி​யல் எதிரி​களின் மீது பொய் வழக்​கு​களைப் புனைந்​து, எந்த விசா​ரணை​யும் தீர்ப்​பும் இன்​றியே, 30 நாட்​கள் கைது செய்​யப்​பட்டு இருந்​தாலே மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட தலை​வரைப் பதவிநீக்​கம் செய்​ய​லாம் எனும் சட்​டப்​பிரிவு​களின்​கீழ், அவர்​களை ஆட்​சி​யில் இருந்து பாஜக அகற்​றவே இது வழி செய்​கிறது.

குற்​றம் என்​பது தீர விசா​ரித்த பிறகே முடி​வாகும். வெறுமனே வழக்கு பதிவ​தால் முடி​வா​காது என்​ப​தால், அரசி​யலமைப்​புக்​குப் புறம்​பான இந்​தச் சட்​டத்​திருத்​தம் நிச்​சய​மாக நீதி​மன்​றங்​களால் ரத்து செய்​யப்​படும். மேலும், பல மாநிலங்​களி​லும் முதல்​வர்​களாக, அமைச்​சர்​களாக இருக்​கும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணிக் கட்​சி​யில் உள்ள மாநிலக் கட்​சித் தலை​வர்​களை, “ஒழுங்​காக எங்​களு​டன் இருங்​கள், இல்​லை​யென்​றால்…” என்று மிரட்​டு​வதற்​கான தீய நோக்​க​மும் இதில் உள்​ளது.

எந்​தச் சர்​வா​தி​காரி​யும் முதலில் செய்​வது, தனது எதி​ராளி​களைக் கைது செய்​ய​வும் பத​விநீக்​க​வு​மான அதி​காரத்​தைத் தனக்​குத் தானே வழங்​கிக் கொள்​வது​தான். அதைத்​தான் இந்​தச் சட்​டத்​திருத்​த​மும்​ செய்​ய முயல்​கிறது. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

கனிமொழி எம்.பி. கண்டனம்: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கனிமொழி எம்.பி. கூறியதாவது: சில முக்கியமான மசோதாக்களை, இறுதி நாளில் தாக்கல் செய்வதை மத்திய பாஜக அரசு வழக்கமாக வைத்திருக்கிறது. நாட்டின் ஜனநாயகத்தை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆட்சிகளை அச்சுறுத்துவதற்காகவே, பல மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பாஜக துடிக்கிறது.

பல மாநிலங்களில் இருப்பது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியா அல்லது மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் இணைந்து உருவாக்கிய ஆட்சியா என்ற ஒரு மிகப்பெரிய கேள்வியை, ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு பிரச்சாரம் மக்கள் மனதில் விதைத்துள்ளது. ஆனால், எந்த பதிலையும் நாடாளுமன்றத்தில் ஆட்சியாளர்கள் கூறவில்லை. இதுகுறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் போராட்டத்தில் ஈடுபடக்கூடிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x