Published : 21 Aug 2025 02:03 AM
Last Updated : 21 Aug 2025 02:03 AM
மதுரை: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் காவல் மரண வழக்கில் தனிப்படை வாகன ஓட்டுநரை 6-வது குற்றவாளியாக சேர்த்து, ஒரே மாதத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார், நகை திருட்டு புகார் தொடர்பாக தனிப்படை காவலர்கள் விசாரணை நடத்தியபோது தாக்கியதில் உயிரிழந்தார். இதுகுறித்து சிபிசிஐடி போலீஸார் வழக்குபதிவு செய்து, தனிப்படை காவலர்கள் 5 பேரை கைது செய்தனர்.
இந்நிலையில், அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும், சிபிஐ விசாரணையை முடித்து, ஆக. 20-ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
அஜித்குமார் மரண வழக்கு தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தன.
சிபிஐ வழக்கறிஞர் மொய்தீன் பாட்சா வாதிடும்போது, “அஜித்குமார் காவல் மரணம் வழக்கில் சிபிஐ விசாரணையை முடித்து, மதுரை தலைமை நீதித்துறை நடுவர் மன்றத்தில் இன்று (ஆக. 20) ஆன்லைன் வழியாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கில் தனிப்படை வேன் ஓட்டுநர் ராமச்சந்திரன் 6-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். குற்றப்பத்திரிகையில் 103 சாட்சிகளின் வாக்குமூலங்கள், 102 ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன.
வழக்கு தொடர்பான தொழில்நுட்ப ஆவணங்களின் சிஎஃப்எஸ்எல் ஆய்வறிக்கை டெல்லி மற்றும் ஹைதராபாத் ஆய்வகங்களில் இருந்து வர வேண்டியுள்ளது. அந்த முடிவுக்கு பிறகே, வழக்கில் உயர் அதிகாரிகள் மற்றும் வேறு நபர்களின் தொடர்புகள் உறுதியாகும்” என்றார்.
வழக்கறிஞர் மாரீஸ்குமார் வாதிடும்போது, “அஜித்குமாருக்கு எதிராக நிகிதா என்ற பெண் முதலில் திருட்டு புகார் அளித்தார். இந்த வழக்கும் சிபிஐக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை” என்றார். சிபிஐ தரப்பில் “திருட்டு வழக்கு தொடர்பான ஆவணங்கள் மாநில போலீஸாரிடம் இருந்து பெறப்படவில்லை. ஆவணங்கள் கிடைத்ததும் அந்த வழக்கு விசாரிக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.
அஜித்குமார் தாயாரின் வழக்கறிஞர் ஹென்றிதிபேன் வாதிடும்போது, “சாட்சிகளின் வீடுகளில் ஆக.19-ல் தான் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டது. சாட்சிகளின் வீடுகளில் பாதுகாப்பு கதவுகள், அலாரம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்தப்படவில்லை” என்று தெரிவித்தார்.
பின்னர் நீதிபதிகள் “இந்த வழக்கில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் குற்றவாளிகளாக உள்ளனர். இதனால் சாட்சிகளை கலைப்பது, ஆதாரங்களை அழிப்பது போன்றவை நடைபெற வாய்ப்புள்ளது. எனவே, விசாரணை சரியான முறையில் நடைபெறுகிறது என்ற நம்பிக்கையை சாட்சிகள் மற்றும் மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும்” என்றனர்.
மேலும் நீதிபதிகள், “அஜித் குமார் காவல் மரணம் தொடர்பான வழக்கில் சிபிஐ குறிப்பிட்ட காலத்துக்குள் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதற்காக சிபிஐ டிஎஸ்பி மோஹித்குமார் தலைமையிலான சிபிஐ போலீஸாரை நீதிமன்றம் பாராட்டுகிறது. இருப்பினும் விசாரணை முழுமை யாக முடியவில்லை. அஜித்குமார் மீதான திருட்டு வழக்கு விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை.
திருட்டு வழக்கின் ஆவணங்களை போலீஸார் சிபிஐக்கு ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். பின்னர், சிபிஐ வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்க வேண்டும். வழக்கின் முக்கிய சாட்சிகளுக்கு சிவகங்கை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப் படி அனைத்து பாதுகாப்பு வசதி களையும் ஒரு வாரத்தில் வழங்க வேண்டும். அஜித்குமார் வழக்கு விசாரணையை உயர் நீதிமன்றம் தொடர்ந்து கண்காணிக்கும். விசாரணை செப். 24க்கு தள்ளி வைக்கப்படுகிறது” என்று உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT