Last Updated : 20 Aug, 2025 04:41 PM

3  

Published : 20 Aug 2025 04:41 PM
Last Updated : 20 Aug 2025 04:41 PM

தவெக மாநாட்டு திடலில் சரிந்து விழுந்த 100 அடி உயர கொடிக் கம்பம் - மதுரையில் நடந்தது என்ன?

மதுரை: மதுரை தவெக மாநாட்டுத் திடலில் நட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சரிந்து விழுந்ததால் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தச் சம்பவத்தில் ஒரு கார் சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

மதுரை அருகே அருப்புக்கோட்டை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை (ஆக.21) நடக்கிறது. இதற்கான பிரமாண்ட மேடை அமைத்தல் உள்ளிட்ட பணிகளும் முடிந்து மாநாட்டு திடல் தயார் நிலையில் உள்ளது. மாநாடுக்கான ஏற்பாடுகள், தமிழகம் முழுவதும் இருந்து கட்சியினர், ரசிகர்கள் வருகையும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மாநாடு தொடங்கும் முன்பு மேடையில் இருந்தபடி ‘ரிமோட்’ மூலம் 100 அடி உயரக் கம்பத்தில் கட்சியை கொடியை கட்சியின் தலைவர் விஜய் ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 1,000 கிலோ எடை கொண்ட 100 அடி உயர இரும்பு கொடிக் கம்பம் தயாரிக்கப்பட்டது. நேற்று முதலே கொடிக் கம்பம் நடும் பணி தொடங்கியது.

கம்பத்தை நடும் பணியில் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் நிர்வாகிகள் இன்று ஈடுபட்டனர். கம்பத்தை நடுவதற்கு தோண்டிய ஆழமான குழியின் மேல் சிமென்ட் கான்கிரீட்டில் பொருத்திய இரும்பு நட்டுகளில் கிரேன் மூலம் கொடிக் கம்பத்தை தூக்கி நிமிர்த்து நடப்பட்டன. அடிப்பகுதியிலுள்ள 4 இரும்பு நட்டுகளில் பொருத்தும்போது, எதிர்பாராதவிதமாக திடீரென கம்பத்தில் கட்டியிருந்த நாடா கயிறு அறுந்து ஒரு பக்கமாக சாய தொடங்கியது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அருகில் இருந்த பொதுச் செயலாளர் மற்றும் நிர்வாகிகள் அப்பகுதியை விட்டு விலகி ஓடினார். கொடிக் கம்பம் சாய்ந்து கார் மீது விழுந்து வளைந்தது. இதில் அந்தக் காரின் மேல் பகுதி முழுவதும் சேதமடைந்தது. ஆட்கள் இல்லாத திசையில் கம்பம் விழுந்ததால் நல்வாய்ப்பாக பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

மாநாடு தொடங்கும் முன்பே நடந்த இச்சம்பவம் தவெகவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டு திடலைக் காண சென்ற கட்சியினருக்கும், பொதுமக்களுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் அங்கு சென்றனர். சாய்ந்து விழுந்த கொடிக் கம்பத்தை அங்கிருந்து அப்புறப்படுத்த அறிவுறுத்தினர். மேலும், அப்பகுதியில் நிறுத்தி வாகனங்களும் அப்புறப்படுத்தினர்.

இதற்கிடையில், அதே இடத்தில் மீண்டும் 100 அடி கொடிக் கம்பத்தை நட முடியுமா என நிர்வாகிகள் ஆலோசித்துள்ளனர். பிரத்யேகமாக தயாரித்த 100 அடி கொடிக் கம்பம் சாய்ந்து விழுந்து சேதமடைந்ததால் அக்கம்பத்தை மீண்டும் பயன்படுத்த முடியாத சூழலில், தலைவர் விஜய் கட்சி கொடியை ஏற்றுவதல் சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், மாநாடு தொடங்குவதற்குள் கொடிக் கம்பத்தை மேடைக்கு முன்பகுதியில் நிறுவும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘இந்த மாநாட்டையொட்டி 100 அடி உயர கம்பத்தில் கட்சிக் கொடி ஏற்ற ஏற்கெனவே முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், 100 அடி கொடிக் கம்பம் தொடர்ந்து 5 ஆண்டாக அதே இடத்தில் தவெக கொடி பறக்கவிடும் வகையில் ஒப்பந்தம், சம்பந்தப்பட்ட நில உரிமையாளருடன் கட்சியினர் பேசியுள்ளனர்.

இதில் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டு, 2 நாளுக்கு முன்புதான் உடன்பாடு ஏற்பட்டு, அதன்பின் அவசரமாக கம்பம் நடப்பட்டு இருக்கிறது. அதிக எடை தாங்காமல் நாடா கயிறு அறுந்து விழுந்ததாக சொல்கின்றனர். எதுவானாலும், இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவுமில்லை’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x