Last Updated : 20 Aug, 2025 03:45 PM

 

Published : 20 Aug 2025 03:45 PM
Last Updated : 20 Aug 2025 03:45 PM

பாஜக, என்.ஆர்.காங். மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர்: நாராயணசாமி பேச்சு

முன்னாள் முதல்வர் நாராயணசாமி | கோப்புப் படம்

புதுச்சேரி: வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர். எதிரிகளை முறியடிக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்த நாள் விழா புதுச்சேரி காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்துக்கு முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, ”இந்திய நாட்டை சிறந்த வல்லரசாக ஆக்க வேண்டும் என்று பாடுபட்டவர் ராஜீவ் காந்தி. கல்வித்துறையில் பல மாற்றங்களை கொண்டு வந்தார். நம் பிள்ளைகள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்கிறார்கள் என்றால் அது ராஜீவ் காந்தியின் சாதனை. இதையெல்லாம் மக்கள் நினைத்து பார்க்க வேண்டும். இது தேர்தலின் முதல்கட்ட பணி. எந்தொரு கருத்து வேறுபாடும் இல்லாமல் நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும்.

புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைவதற்கு அனைவரும் பாடுபட வேண்டும். அதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மாநிலத்தை ஆளும் முதல்வர் ரங்கசாமி, பாஜக ஆகியோர் பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதி நிறைவேற்ற வில்லை. பொய் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் செய்த பிரச்சாரத்தில் எதுவும் நடைபெறவில்லை. இப்போது மக்கள் அவர்களை வெறுத்துள்ளனர்.

அதன் வெளிப்பாடு தான் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெரிந்து. அதேபோல் வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். நாம் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தான் காங்கிரஸ் காரர்கள் தலை நிமிர்ந்து தெருவில் நடமாட முடியும்.

அது மட்டுமில்லாமல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் முதல்வர், அமைச்சர்கள் அலுவலகம் திறந்திருந்தது. ஆனால், தற்போது காங்கிரஸ் கட்சியை பழி வாங்க வேண்டும் என்று கங்கனம்கட்டி கொண்டு செயல்படுகிறார்கள். வரும் சட்டப்பேரவை தேர்தல் ஒரு வித்தியாசமான தேர்தல். இந்த தேர்தலில் பாஜக, என்.ஆர்.காங்கிரஸ் மட்டுமின்றி கண்ணுக்குத் தெரியாத எதிரிகள் பலர் உள்ளனர்.

இவர்களை முறியடிக்க வேண்டும். முறியடிக்கின்ற சக்தி தொண்டர்கள் கையில் உள்ளது. நீங்கள் நினைத்தால் எதையும் சாதிக்கலாம். மேலும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் காங்கிரஸ்கார்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படும். அதனை உறுதி மொழியாக எடுத்துக் கொண்டு செயல்பட வேண்டும்” என்று நாராயணசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x