Published : 20 Aug 2025 11:14 AM
Last Updated : 20 Aug 2025 11:14 AM
மயிலாடுதுறை: தமிழர் ஒருவர் குடியரசு துணைத் தலைவராவதற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தெரிவிததுள்ளார். மயிலாடுதுறையில் நேற்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ பிரச்சார பயணம் மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசியது: மயிலாடுதுறை தொகுதி ஏற்கெனவே தேமுதிக கோட்டையாக இருந்தது. வரும் தேர்தலில் மீண்டும் இத்தொகுதியில் தேமுதிக வெற்றிபெறும். தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் தொகுதியிலேயே கூட பேருந்து வசதிகள் இல்லை. தெருவுக்கு 10 டாஸ்மாக் கடைகள் திறந்ததைவிட வேறு பெருமை எதுவும் இல்லை.
தேமுதிக வெற்றி பெற்றால் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் சி.பி.ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் வெற்றி பெற்றால் அது நிச்சயம் தமிழகத்துக்கும், தமிழர்களுக்கு பெருமை மிகுந்ததாக இருக்கும். அவர் வெற்றி பெற அனைவரும் ஒன்றிணைந்து ஆதரவு அளிக்க வேண்டும்.
ஜன.9-ல் கடலூரில் நடைபெறும் கட்சி மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும். திமுக ஆட்சி நிறைகளும், குறைகளும் நிறைந்ததாக இருக்கிறது. தனது கூட்டத்தின் இடையே, அடிக்கடி ஆம்புலன்ஸ் வாகனம் வேண்டுமென்றே செல்வதாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளது குறித்து கேட்டதற்கு, இது ஆண்டாண்டு காலமாக நடக்க கூடிய ஒன்றுதான். நாங்களே அதை சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
ஆம்புலன்ஸ் வாகனம் வரும், மின் விளக்குகளை அணைத்து விடுவார்கள். இதுபோன்ற நிறைய பிரச்சினைகள் வரும் என்றார். தேமுதிக பொருளாளர் சதீஷ், மாவட்டச் செயலாளர் பண்ணை சொ.பாலு, அவைத் தலைவர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT