Published : 20 Aug 2025 06:21 AM
Last Updated : 20 Aug 2025 06:21 AM
பூந்தமல்லி: முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா செப். 15-ம் தேதி காஞ்சிபுரத்தில் மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா தலைமையில் நடைபெற உள்ளது. இவ்விழா தொடர்பாக சென்னை மண்டல அளவிலான ஆலோசனைக் கூட்டம், நேற்று திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற மதிமுக துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யாவுக்கு, கட்சி நிர்வாகிகள் சால்வை, வீரவாள் வழங்கினர். இந்த கூட்டத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், தாம்பரம் மாநகராட்சிக்கும் புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் மல்லை சத்யா தெரிவித்ததாவது: காஞ்சிபுரத்தில் செப். 15-ம் தேதி நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் விழாவில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு திராவிட ரத்னா விருது வழங்க இருக்கிறோம். அதனை வைகோ பெற்றுக் கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சார்பில், 15 நாட்களில் நான் விளக்கம் அளிக்க வேண்டும் என, எனக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. நான் உடனடியாக நேரில் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன். நாள், நேரத்தை வைகோதான் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இது தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அனுப்பிய கடிதத்தில், “கட்சியின் சட்ட திட்டங்களை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொள்வதாக குற்றச்சாட்டு எழுந்து வருவதால், மல்லை சி.ஏ.சத்யாவை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கிவைக்க உத்தரவிடப்படுகிறது.
ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டு கட்சியின் உடமைகள், ஏடுகள், பொறுப்புகள், கணக்குகள் அனைத்தையும் கட்சியின் பொதுச்செயலாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தப்படுகிறது. அவரது கருத்துக்கோ, செயல்பாட்டுக்கோ மதிமுக பொறுப்பேற்காது. அவர் மதிமுக கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது. மதிமுக தலைமை நிர்வாகிகள் குறித்து கருத்து பதிவு செய்யக் கூடாது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT