Published : 20 Aug 2025 05:32 AM
Last Updated : 20 Aug 2025 05:32 AM
சென்னை: கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, நிலம் கையகப்படுத்தல் உட்பட பல்வேறு பணிகளைத் தொடங்க ரூ.2,442 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னையில் இரு வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இதையடுத்து, 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இதற்கிடையில், மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவுபடுத்தும் நோக்கில், கோயம்பேடு - ஆவடி வரையிலான புதிய வழித்தடத்தை பட்டாபிராம் வரை நீட்டிக்க திட்டமிட்டு சாத்தியக்கூறு ஆய்வுகள் நடத்தப்பட்டன.
இதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அதாவது, கோயம்பேட்டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயில், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்கும் வகையில், திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 21.76 கி.மீ. தூரம் கொண்டுள்ள இந்த தடத்தில், 19 இடங்களில் மேம்பால ரயில் நிலையங்கள் அமைக்கப்படும். மொத்தம் ரூ.9,928 கோடியில் இத்திட்டத்தைச் செயல்படுத்த மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசு ஏற்கெனவே ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இந்த வழித்தடத்தில் நிலம் கையகப்படுத்தல் உட்பட பல்வேறு பணிகளைத் தொடங்குவதற்கு தமிழக அரசு தற்போது அனுமதி வழங்கியுள்ளது.
இதற்காக, ரூ.2,442 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தல், சாலைப் பணிகள், நிலப்பரப்பு ஆய்வுகள், புவி தொழில்நுட்ப ஆய்வு, மரம் வெட்டுதல் மற்றும் மீண்டும் நடுதல் உட்பட பல்வேறு பணிகளுக்கு இத்தொகையை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “இந்த வழித்தட நீடிப்புக்காக, மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டுள்ளது. 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் முடிந்து பிறகு, இந்த திட்டப்பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளோம். அதற்கு முன்பாக, நிலம் கையகப்படுத்தல் உள்ளிட்ட ஆரம்பக் கட்டப் பணிகளை முடித்து, தயாராக இருக்க முடிவு செய்துள்ளோம். இதன்மூலமாக தாமதத்தைத் தவிர்க்க முடியும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT