Published : 20 Aug 2025 12:16 AM
Last Updated : 20 Aug 2025 12:16 AM
சென்னை: ஏறத்தாழ 75 டன் எடை கொண்ட செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதற்காக 40 மாடி உயரம் கொண்ட ராக்கெட்டை உருவாக்கி வருவதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் கூறினார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற இஸ்ரோ தலைவர் வி.நாராயணனுக்கு, தெலங்கானா ஆளுநர் ஜிஷ்ணு தேவ் வர்மா கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தார். தொடர்ந்து நாராயணன் பேசியதாவது: நடப்பாண்டில் இந்திய ராக்கெட்டுகளைப் பயன்படுத்தி அமெரிக்காவின் 6,500 கிலோ எடையுள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோளை விண்வெளியில் நிலைநிறுத்தும் பணிகள்மேற்கொள்ளப்பட உள்ளன. இதுதவிர, தொழில்நுட்ப செயல் விளக்கச் செயற்கைக்கோள் (TDS) மற்றும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஜிசாட்-7ஆர் ஆகியவற்றையும் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள ஜிசாட்-7 (ருக்மிணி) செயற்கைக்கோளுக்கு மாற்றாக இந்திய கடற்படைக்காக ஜிசாட்-7ஆர் பிரத்யேகமாகவடிவமைக்கப்பட்டுள்ளது. மறைந்த விஞ்ஞானி அப்துல் கலாம் உருவாக்கிய முதல் ராக்கெட் 17 டன் எடை கொண்டது. இது35 கிலோ எடையை பூமியின் தாழ்வான சுற்றுவட்டப் பாதையில் செலுத்தும் திறன் கொண்டது. ஆனால், தற்போது 75,000 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை தாழ்வான சுற்றுப்பாதையில் செலுத்தும் ராக்கெட்டை நாங்கள் உருவாக்கி வருகிறோம். இந்த ராக்கெட் 40 மாடி கட்டிடம் உயரம் கொண்டது. தற்போது இந்தியாவில் 55 செயற்கைக்கோள்கள் சுற்றுப்பாதையில் உள்ளன. இந்த எண்ணிக்கை 3 முதல் 4 ஆண்டுகளில் 3 மடங்காக அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT