Last Updated : 19 Aug, 2025 05:26 PM

 

Published : 19 Aug 2025 05:26 PM
Last Updated : 19 Aug 2025 05:26 PM

மதுரை தவெக மாநாட்டு திடல் தயார் - பாதுகாப்பு பணியில் 3,000 போலீஸார், 500 பெண் பவுன்சர்கள்!

மதுரை: மதுரை பாரபத்தியில் ஆகஸ்ட் 21-ம் தேதி (நாளை மறுநாள்) நடக்கும் விஜய்யின் தவெக மாநில மாநாட்டுக்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டி, மாநாட்டு திடல் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

மதுரை அருகே அருப்புக்கோட்டை - தூத்துக்குடி சாலையில் பாரபத்தி என்ற இடத்தில் தவெகவின் 2-வது மாநில மாநாடு நாளை மறுநாள் (ஆக.21) நடக்கிறது. சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் எல்இடி திரைகளுடன் கூடிய டிஜிட்டல் விடிவிலான மேடை, பார்வையாளர்கள் கேலரிகள், வாகன பார்க்கிங், மாநாட்டுத் திடலை சுற்றிலும் கட்சி கொடி தோரணங்கள், பேனர்கள், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர், மருத்துவ முகாம், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், திடலை சுற்றிலும் வண்ண மின் விளக்குகள் என மாநாடுக்கான பல்வேறு ஏற்பாடுகளும் இறுதிக் கட்டத்தை எட்டியபோதிலும் மாநாட்டு திடல் ஏறக்குறைய தயார் நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தலைமையில் மதுரை மாவட்ட செயலாளர்கள் கல்லாணை, தங்கப் பாண்டி உள்ளிட்ட மதுரை மாவட்டம் மற்றும் பிற மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் மாநாடுக்கான பணியில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். மாநாட்டு திடலை ஒன்றுக்கு இருமுறைக்கு மேல் நேரில் பார்வையிட்ட மதுரை எஸ்பி ஆனந்த், மாநாடுக்கான பாதுகாப்பு, நெரிசல் தவிக்கும் விதமாக வழித்தடங்கள் மாற்றும் குறித்து அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். பல்வேறு மாவட்டத்தில் இருந்து மாட்டுக்கு வரும் வாகனங்கள், மாநாட்டு திடலை கடந்து செல்லும் பிற வாகனங்களுக்கான மாற்று வழித்தடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டுக்கென சுமார் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். இதற்காக வெளியூர்களில் இருந்தும் காவல் துறையினர் அழைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சுமார் 2,000-க்கும் மேற்பட்ட தனியார் பாதுகாவலர்கள், 500 பெண் பவுன்சர்களும் தவெக சார்பில் ஏற்பாடு செய்திருப்பதாக கட்சியினர் தெரிவித்தனர்.

மாநாட்டுக்கு விஜய்யை அழைக்கும் விதமாக அக்கட்சியினர் விமான நிலைய சாலை, எலியார் பத்தி, பாரபத்தி, பெருங்குடி, வலையங்குளம், ஆவியூர் உட்பட மதுரையின் முக்கிய இடங்களில் வித்தியாசமான சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். ‘ஆக.21-ம் தேதி வரை ஒட்டுமொத்த மதுரையே தளபதி கன்ட்ரோல், தளபதி எப்பவுமே அவுட் ஆஃப் கன்ட்ரோல், மக்களின் முதல்வரே, முதல்வர் வேட்பாளரே போன்ற வாசகங்கள் அடங்கிய விஜய்யின் தவெக தொண்டர்களின் போஸ்டரால் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நாளை மறுநாள் நடக்கவிருக்கும் மாநில மாநாட்டை சிறப்பாக, மிகுந்த பாதுகாப்புடன் நடத்துவது பற்றி கட்சியின் நிர்வாகிகளு டன் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் இன்று முக்கிய ஆலோசனை நடத்தினர். விஜய்யின் அறிவுறுத்தலின் பேரில் பல்வேறு அறிவுரைகளும் நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கூறப்பட்டதாக அக்கட்சியினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x