Published : 19 Aug 2025 05:59 AM
Last Updated : 19 Aug 2025 05:59 AM
சென்னை: வன்னிய சங்க முன்னாள் தலைவர் காடுவெட்டி ஜெ.குருவின் மகள் குரு.விருதாம்பிகை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாமக நிறுவனர் ராமதாஸும், தலைவர் அன்புமணியும் சண்டை போட்டுக்கொள்வதுபோல நாடகமாடி வன்னியர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவர்கள் வன்னியர் சமூகத்தின் நலனுக்காக சண்டை போடவில்லை. பணத்துக்காகவும், பதவிக்காகவும் மட்டுமே சண்டை போடுகின்றனர். இதனால் கட்சிக்கு எந்த பயனும் இல்லை. இது முழுக்க அரசியல் நாடகமாகும்.
பாமக ஒழுங்கு நடவடிக்கை குழுவில் 16 குற்றச்சாட்டுகள் அன்புமணி மீது வைக்கப்பட்டுள்ளன. ஆனால், அதன் மீது எந்த நடவடிக்கையும் ராமதாஸ் எடுக்கவில்லை. இதுவே அதில் ஒரு குற்றத்தை ஜி.கே.மணியோ, அருளோ செய்திருந்தால் இந்நேரம் கட்சியில் இருந்து அவர்களை நீக்கியிருப்பார்கள். ராமதாஸை பைத்தியம் என்று சொல்லும் அன்புமணியை கட்சியில் இருந்து நீக்கவில்லை. மாறாக பிறந்தநாள் விழாக்களில் மாறி, மாறி கேக்குகளை ஊட்டிவிடுகின்றனர்.
பின்னர், எதற்காக இந்த நாடகம்? இந்த பிரித்தாளும் சூழ்ச்சிதான் ராமதாஸின் அரசியல். இது வன்னியர் மக்களுக்கு செய்யும் துரோகமாகும். இதனால் வட மாவட்டங்களில் கடந்த 2016-ல் 15 சதவீத வாக்கு சதவீதத்தை வைத்திருந்த பாமக, இன்றைக்கு 2 சதவீதத்துக்கு கீழ் சென்றுவிட்டது. சுயலாபத்துக்காக மட்டுமே கட்சி நடத்தும் இந்த இருவரால் வன்னியர் மக்கள் சீரழிவு பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர்.
அதேபோல், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, திருச்சியில் பேசும்போது,வன்னியருக்கான 10.5 இடஒதுக்கீடு முடிந்து போனகதை என்கிறார். பழனிசாமிக்கும், ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் வன்னியர் மக்களை பார்த்தால் எப்படி தெரிகிறது? எனவே, மறைந்த காடுவெட்டி குருவின் வழியில் வன்னியர் சமூகத்துக்காக தனியாக ஒரு கட்சியை விரைவில் ஆரம்பிக்க உள்ளோம். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வன்னியர் மக்களுக்கு எந்த கட்சி ஆதரவாக இருக்கிறதோ, அந்த கட்சியை வரும் தேர்தலில் நாங்கள் ஆதரிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT