Published : 19 Aug 2025 05:24 AM
Last Updated : 19 Aug 2025 05:24 AM
சென்னை: பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு 24 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள பணப்பலன்களை வழங்குவது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு போக்குவரத்து ஊழியர் சங்கம் (சிஐடியு) சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் சென்னையில் பல்லவன் இல்லம் முன்பு நேற்று நடைபெற்றது.
பணி ஓய்வு பெற்ற 3,500 தொழிலாளர்களுக்கு 24 மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஓய்வுக்கால பலன்களை வழங்க வேண்டும்; பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு 2 ஆண்டு ஊதிய ஒப்பந்த நிலுவையை கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 21 மையங்களில் போக்குவரத்து ஊழியர்கள், ஓய்வூதியர்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இதன் ஒரு பகுதியாக, சென்னையில் மாநகர போக்குவரத்துக் கழக தலைமையகமான பல்லவன் இல்லம் முன்பு அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் - சிஐடியு சார்பில், தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்று நடைபெற்றது. இந்த போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் ஆர்.துரை தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தொடங்கி வைத்தார்.
தமிழக அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராஜன் கூறுகையில், “நீண்டகாலமாக கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன. ஓய்வுபெற்றவர்களுக்கு 25 மாதங்களாக பணப்பலன் வழங்காமல் அரசு மவுனம் காக்கிறது. இது கொடிய செயல். ஓய்வூதியம் பெறுவோரின் பஞ்சப்படி 55 சதவீதத்தில் 23 சதவீதம்தான் வழங்கப்பட்டுள்ளது.
2003-ம் ஆண்டுக்குப் பிறகு, பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். இதை தேர்தல் வாக்குறுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
இதை அமல்படுத்த வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில், இறந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வாரிசு வேலை முறையாக வழங்காமல் உள்ளனர். 5 ஆயிரம் பேர் வரை வேலையில்லாமல் உள்ளனர். இவர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். போக்குவரத்துத் துறையை தனியார்மயமாக்கும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது; இதை உடனடியாகக் கைவிட வேண்டும்'' என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT