Published : 19 Aug 2025 06:05 AM
Last Updated : 19 Aug 2025 06:05 AM
சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை போஜராஜன் நகரில், ரூ.30.13 கோடியில் கட்டப்பட்ட வாகன சுரங்கப் பாலத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். வடசென்னை, கொருக்குப்பேட்டை பகுதியில் உள்ள போஜராஜன் நகர் 3 புறமும் ரயில்வே இருப்புப் பாதைகளால் சூழப்பட்டுள்ளதால், இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் ரயில்வே கடவுப் பாதை மூலமே வெளியே செல்ல முடியும். மேலும், அவசர காலங்களில் அவர்கள் வெளியே செல்வது மிகவும் சிரமமாக இருந்தது.
எனவே, இங்கு வசிக்கும் பொது மக்கள் உள்ளிட்ட வடசென்னைப் பகுதி மக்களின் நீண்ட நாள்கோரிக்கையான, போஜராஜன் நகரில் வாகன சுரங்கப்பாதை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு, சென்னை மாநகராட்சியின் நிதியின் கீழ் ரூ.30.13 கோடியில் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இச்சுரங்கப் பாதையின் நீளம் 207 மீட்டர், அகலம் 6 மீட்டர் ஆகும். மேலும், மழைக்காலங்களில் மழை நீரை வெளியேற்ற ஒரு நீர் சேகரிக்கும் கிணறு, 85 எச்பி திறன் கொண்ட மோட்டார் பம்புகள் மற்றும் ஒரு ஜெனரேட்டர் நிறுவப்பட்டுள்ளது.
இப்பணியின் மூலம் போஜராஜன் நகர், சீனிவாசன் நகர் மற்றும் மின்ட் மார்டன் சிட்டி ஆகிய பகுதிகளில் வசிக்கும் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் பயன் பெறுவர். மேலும், போஜராஜன் நகர் வாகனச் சுரங்கப் பாதையை ஒட்டி ரூ.1.41 கோடியில் குழந்தைகள் விளையாட்டுத் திடல், ரவுண்டானா பூங்கா மேம்பாட்டுப் பணிகள், ரவுண்டானாவைச் சுற்றிலும் நடைபாதை மற்றும் பொதுமக்கள் அமருவதற்கான ஓய்வுக் கூடம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த சுரங்கப் பாலம் மற்றும் விளையாட்டுத் திடல் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என். நேரு, பி.கே.சேகர் பாபு, மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா ஆகியோர் முன்னிலையில் துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ஆர்.மூர்த்தி, ஆர்.டி.சேகர், ஜே.ஜே.எபினேசர், துணை மேயர் மு.மகேஷ் குமார், மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT