Published : 18 Aug 2025 06:37 PM
Last Updated : 18 Aug 2025 06:37 PM
புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் நோக்கில், தமிழக முதல்வரை காரைக்கால் திமுகவினர் சந்திக்கவுள்ளனர்.
புதுச்சேரியில் நான்கு பிராந்தியங்களாக தமிழகம் அருகே புதுச்சேரியும், காரைக்காலும், ஆந்திரம் அருகே ஏனாமும், கேரளம் அருகே மாஹேயும் உள்ளன. மாநில அந்தஸ்து புதுச்சேரிக்கு இதுவரை தரப்படவில்லை. மக்களால் தேர்வான அரசை விட ஆளுநருக்குதான் அதிக அதிகாரம் உள்ளது. முக்கிய முடிவுகள் ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகே நடைமுறைப்படுத்த முடியும்.
புதுச்சேரியில் மாநில அந்தஸ்து கோரி பல போராட்டங்கள் நடந்து வருகின்றன. சுயேட்சை எம்எல்ஏ நேரு தலைமையில் தன்னார்வ அமைப்பினர் டெல்லி சென்று அண்மையில் போராட்டம் நடத்தினர். முதல்வர் ரங்கசாமி டெல்லி சென்று மாநில அந்தஸ்து தர பிரதமர், உள்துறை அமைச்சரை சந்திக்க கோரி வருகின்றனர்.
இந்நிலையில், காரைக்கால் மாநில திமுக அமைப்பாளர் நாஜிம் எம்எல்ஏ கூறியது: ”புதுச்சேரி மாநிலத்தில் மாநில அந்தஸ்துக்காக தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினாலும் ஏதும் நடவடிக்கை எடுக்கவில்லை. மாநில அந்தஸ்துக்காக தான் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியை ஆரம்பித்தவர் ரங்கசாமி. அதற்காகவே கூட்டணி அமைத்தார். இதுவரை மாநில அந்தஸ்து பெறவில்லை.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைக்க பலரும் முயற்சி எடுத்தனர். டெல்லிக்கும், புதுச்சேரிக்கும் இடையில் பல வித்தியாசங்கள் உள்ளன. தமிழக முதல்வர் ஸ்டாலின் பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றுள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் 1963-ல் சட்டத் திருத்தம் கொண்டு வந்து மாநில அந்தஸ்து பெற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே மாநில அந்தஸ்து பெற முடியும். இது தொடர்பாக தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். அவரது வழிகாட்டுதல்படி நீதிமன்றம் செல்வோம். உள்துறை அமைச்சகம் கமிட்டி மாநில அந்தஸ்துக்கு ஏற்கெனவே பரிந்துரை செய்துள்ளது.
டபுள் என்ஜின் அரசு வந்தாலும் சிரமமாகவுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் செல்ல திமுக சார்பில் திட்டமிட்டுள்ளோம். அதுபற்றி தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளோம்" என்று நாஜிம் எம்எல்ஏ கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT