Published : 18 Aug 2025 03:28 PM
Last Updated : 18 Aug 2025 03:28 PM
சென்னை: சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
தங்கள் வணிகச் சின்னமாக பதிவு செய்யப்பட்டுள்ள சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்திலான கொடியை பயன்படுத்த தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு தடை விதிக்க வேண்டும் என, தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் நிறுவனத் தலைவர் பச்சையப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரணைக்கு வந்த போது, வணிக சின்னமாக பதியப்பட்ட தங்கள் சபை கொடியை பயன்படுத்துவது வணிக சின்ன சட்டத்தையும், பதிப்புரிமை சட்டத்தையும் மீறிய செயல் எனவும், கொடி ஓரளவு ஒற்றுமையாக இருப்பதால் மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படும் என்பதால், சிவப்பு, மஞ்சள், சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபை தரப்பில் வாதிடப்பட்டது.
மனுதாரர் சபையோ, த.வெ.க.வோ எந்த வர்த்தகத்திலும் ஈடுபடவில்லை என்பதால், கொடி மீது உரிமை கோர முடியாது எனவும், மனுதாரர் கொடியை ஒப்பிடும் போது த.வெ.க கொடி முற்றிலும் வேறுபாடானது என இரு கொடிகளிலும் இடம்பெற்றுள்ள அம்சங்கள் குறித்து விளக்கி த.வெ.க தரப்பில் வாதிடப்பட்டது. த.வெ.க. கொடியால் எப்படி இழப்பு ஏற்பட்டது என்பதை மனுதாரர் விளக்கவில்லை என்பதால் தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் த.வெ.க. தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இரு கொடிகளையும் ஒப்பிடும்போது, மனுதாரர் சபை கொடியை த.வெ.க பயன்படுத்தியுள்ளது என கூற முடியாது எனவும், த.வெ.க. கொடி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் என கூற முடியாது எனவும், சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறத்தில் கொடியை பயன்படுத்த த.வெ.க.வுக்கு தடை விதிக்க முடியாது எனத் தெரிவித்து, இடைக்கால தடை கோரிய தொண்டை மண்டல சான்றோர் தர்ம பரிபாலன சபையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT