Published : 18 Aug 2025 03:25 PM
Last Updated : 18 Aug 2025 03:25 PM
மதுரை, திண்டுக்கல், தேனி நாடாளுமன்றத் தொகுதிகளில் வட மாவட்ட பாஜக நிர்வாகிகள் மேற்கொண்ட பூத் கமிட்டி ஆய்வில் பல்வேறு குளறுபடிகள் கண்டறியப்பட்டுள்ளன.
தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதால் தேர்தலுக்கு தயாராகும் வகையில் அரசியல் கட்சிகள் கிளைகளை பலப்படுத்தும் பணியை தொடங்கியுள்ளது. பாஜகவில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக பூத் கமிட்டி ஆய்வு நடைபெற்று வருகிறது. பூத் கமிட்டி ஆய்வுப்பணி பிற மாவட்ட பாஜக நிர்வாகிகளை கொண்டு மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக ஆய்வுக்குச் செல்பவர்களுக்கு கட்சியிலிருந்து ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.
முதல் கட்டமாக கன்னியாகுமரி, நெல்லை, விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியிலும், 2-ம் கட்டமாக தென்காசி, தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பூத் கமிட்டி ஆய்வுகள் நடைபெற்றன. 3-ம் கட்டமாக மதுரை, தேனி, திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதிகளில், கடந்த 3 நாட்களாக பூத் கமிட்டி ஆய்வு நடைபெற்றது. இந்த பணியில் சென்னை, செங்கல்பட்டு, நாமக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட வட மாவட்ட நிர்வாகிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த ஆய்வின்போது பூத் கமிட்டி நியமனத்தில் பல்வேறு குளறுபடிகள் கண்டறியப்பட்டன.
பல்வேறு பூத்களில் உள்ளூரில் நிலவும் அரசியலுக்கு ஏற்ப ஆளும் கட்சியான திமுக மற்றும் பிற கட்சிகளுக்கு கடும் போட்டியை கொடுப்பவர்களுக்கு பதிலாக சிபாரிசு அடிப்படையில் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டிருப்பது, ஆய்வுக்கு சில நாட்களுக்கு முன்பு நண்பர்கள், தெரிந்தவர்கள், உறவினர்களை கொண்டு பூத் கமிட்டியை பூர்த்தி செய்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த குளறுபடிகள் குறித்து பூத் கமிட்டி ஆய்வுக்கு வந்தவர்கள் கட்சி மேலிடத்துக்கு அறிக்கை அனுப்பியுள்ளனர்.
இது குறித்து பாஜக மூத்த நிர்வாகி கூறியதாவது: தமிழகத்தில் பாஜகவுக்கு வாக்காளர்கள் இல்லாமல் நிர்வாகிகள் மட்டும் இருந்த காலமும் இருந்தது. தற்போது அந்த நிலை தலைகீழாக மாறியுள்ளது. பாஜகவுக்கு ஆதரவான வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். அதே நேரத்தில் அந்த வாக்காளர்களின் வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் பாஜவுக்கு திருப்பும் திறன் கொண்ட நிர்வாகிகள் இல்லை. மாவட்டத் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் பூத் கமிட்டி கூட்டங்களுக்கு செல்வதில்லை. சக நிர்வாகிகளிடம் கருத்து கேட்பதில்லை.
பூத் கமிட்டி தான் ஒரு கட்சியின் அடிப்படை. பூத் கமிட்டி வலுவாக இருந்தால் மட்டுமே கட்சிக்கு வாக்குகள் கிடைக்கும். அதற்கு பூத் கமிட்டியில் காலம் காலமாக கட்சிக்காக உழைத்தவர்கள், உண்மையானவர்கள், மாற்றுக்கட்சியினரை தைரியமாக எதிர்கொள்பவர்கள் இருக்க வேண்டும். இதை மாவட்ட நிர்வாகிகள் உறுதிப்படுத்த வேண்டும்.
தற்போது இவ்வாறு நடைபெறுவதில்லை. கடமைக்கு பூத் கமிட்டியை நிரப்புகின்றனர். பலர் அவர்களுக்கு தெரியாமலேயே பூத் கமிட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர். முதல் இரு கட்ட ஆய்வின் போது ஆய்வுப் பணிக்கு ஆர்வமாக சென்ற கட்சி நிர்வாகிகள் கூட இப்போது ஒதுங்கிக் கொண்டனர். மதுரை, தேனி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பூத் கமிட்டி ஆய்வுக்கு நியமிக்கப்பட்டவர்களில் 60 சதவீத நிர்வாகிகள் தான் ஆய்வுக்கு வந்திருந்தனர்.
ஆய்வுக்கு கட்சி சார்பில் பணம் கொடுக்கப்பட்டும் பின்தங்குகின்றனர். பூத் அளவில் கட்சியை பலப்படுத்தினால் தான் 2026 தேர்தல் வெற்றி சாத்தியப்படும். இதனால் பூத் கமிட்டியை பலப்படுத்தும் பணியை எந்த சமரசத்துக்கும் இடம் அளிக்காமல் மேற்கொள்ள கட்சித் தலைமை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT