Published : 18 Aug 2025 01:17 PM
Last Updated : 18 Aug 2025 01:17 PM
தேன்கனிக்கோட்டை பகுதியைச் சுற்றியுள்ள மலைக் கிராமங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் மக்களின் அறியாமை மற்றும் போதிய மருத்துவக் கட்டமைப்பு வசதியின்மையைப் பயன்படுத்தி போலி மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளையொட்டி 500-க்கும் மேற்பட்ட மலைக் கிராங்கள் மற்றும் கிராமங்கள் உள்ளன. இக்கிராம மக்கள் பொருளாதாரம், கல்வியில் மிகவும் பின்தங்கியுள்ளனர். இக்கிராமங்களில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்று வரை கேள்விக்குறியாக இருந்து வருகிறது. இதனால், இப்பகுதி மக்கள் கல்வி மற்றும் மருத்துவச் சிகிச்சைக்கு நகரப்பகுதியை நாடி வரும் நிலையுள்ளது.
கெலமங்கலம், தளி வட்டாரத்தில் மொத்தம் 13 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 60-க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. இந்த மருத்துவமனைகளில் மருத்துவக் கட்டமைப்பு வசதியின்மை, செவிலியர்கள் பற்றாக் குறை உள்ளிட்ட காரணங்களால் கிராம மக்களுக்கு உரிய மருத்துவ வசதி கிடைப்பதில்லை. மேலும், உரிய சிகிச்சைக்கு ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி நகரப் பகுதிக்கு வந்து செல்ல வேண்டிய நிலையுள்ளது. இதனால், தங்கள் பகுதியில் மருத்துவம் படிக்காமல் அலோபதி சிகிச்சை அளிப்போர் நடத்தும் மருத்துவமனையை நாடி செல்வது தொடர்ந்து வருகிறது. இதைப் பயன்படுத்தி, இப்பகுதியில் போலி மருத்துவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக சமூக ஆர்வலர் கூறியதாவது: தேன்கனிக்கோட்டை, கெலமங்கலம், உரிகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்களுக்கு அரசு சார்பில் கல்வி, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தவில்லை மற்றும் உயர் அதிகாரிகளின் பார்வை இக்கிராமங்களில் இல்லாததால், போலி மருத்துவர்கள் இம்மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, இப்பகுதியில் கிளினிக் மற்றும் மருந்தகங்களில் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இவ்வாறு சிகிச்சை பெற வருவோருக்கு அதிக டோஸ் மருந்துகளைக் கொடுப்பதால், சிகிச்சை பெறுவோர் பக்க விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக புகார் எழும்போது, ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் அதேநிலை தொடர்கிறது. எனவே, மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்து, போலி மருத்துவர்களைக் கட்டுப்படுத்தவும், மலைக் கிராமங்களில் அரசு சுகாதார நிலையங்களில் உரிய கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
கிராம மக்களிடம் விழிப்புணர்வு தேவை - அரசு மருத்துவர் ஒருவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் போலி மருத்துவர்கள் உள்ளனர். மருத்துவம் படிக்காமல் கிளினிக் வைத்து சிகிச்சை அளிக்கின்றனர். காய்ச்சல் வந்தால் எதற்காக வருகிறது என்பதை பரிசோதனை செய்யாமல், சீராய்டு மற்றும் ஓவர் டோஸ் மருந்துகளைப் பரிந்துரைக்கின்றனர். இதனால், அப்போதைக்கு காய்சல் குறையும், ஆனால் பக்கவிளைவுகள் அதிகரிக்கும். இதில், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
தனியார் மருத்துவமனைகளில் உடல் பரிசோதனை செய்து சிகிச்சை பெற அதிக செலவாகும் என்பதால், இப்பகுதி மக்கள் போலி மருத்துவரிடம் குறைந்த கட்டணத்தில் தற்காலிகமாகச் சிகிச்சை பெற்று பின்னர் பக்க விளைவுகளைச் சந்தித்து வருகின்றனர். இதுதொடர்பாக கிராம மக்களுக்கு விழிப்புணர்வு செய்தாலும், போலி மருத்துவர்களை நாடிச் செல்கின்றனர்.
இச்சிகிச்சையால் உயிரிழப்பு நடந்தால், போலி மருத்துவர்களிடம் கட்ட பஞ்சாயத்து செய்து, வெளியில் தெரியாமல் பார்த்துக் கொள்கின்றனர். மேலும், உயிரிழந்தவரை முனி அடித்து விட்டது, பேய் அடித்துவிட்டது என மூட நம்பிக்கையைப் பரப்பி வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT