Last Updated : 18 Aug, 2025 11:14 AM

 

Published : 18 Aug 2025 11:14 AM
Last Updated : 18 Aug 2025 11:14 AM

சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்களை சுரண்ட எவரும் துணை போகக்கூடாது: அன்புமணி

சென்னை: தூய்மைப் பணியாளர்களை அரசு ஊழியர், தொழில் முனைவோர் ஆக்குங்கள். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் தற்காலிகப் பணியாளர்களாக பணியாற்றி பணி நீக்கம் செய்யப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில், ‘‘ அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்பட்டால் அவர்களும், அவர்களின் தலைமுறைகளும் தொடர்ந்து துப்புரவுப் பணியையே செய்யக் கட்டாயப்படுத்துவதைப் போலாகி விடும்; எனவே அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது” என்று சில தலைவர்களால் புதிய யோசனைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அவை சொல்லப்பட்ட காலமும், சூழலும் ஐயத்தை ஏற்படுத்துகின்றன.

தமிழ்நாட்டில் எந்த ஒரு தொழிலும் ஒரு சமூகத்தினரால் மட்டுமே செய்யப்படுவதாக இருக்கக் கூடாது; எல்லா தொழிலும் எல்லா சமூகத்தினராலும் செய்யப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு ஆகும். அந்த வகையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பாலும் தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வரும் நிலையில், அவர்களை அந்தத் தொழிலில் இருந்து மீட்க வேண்டும்; அவர்களுக்கு கண்ணியமான வாழ்வாதாரம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஆனால், பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் 12 நாள்களாக போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது முன் வைக்கப்படாத இந்த யோசனைகள், தூய்மைப் பணியாளர்களின் இந்தக் கோரிக்கையை நிராகரித்ததுடன், அவர்களின் மீது அடக்குமுறையையும் கட்டவிழ்த்து விட்டதால் தமிழ்நாடு அரசின் மீது ஒட்டுமொத்த தமிழகமும் கோபத்தில் இருக்கும் நிலையில் எழுப்பப்படுவது தான் வினோதமாக உள்ளது. மக்களின் கோபத்திலிருந்து அரசைக் காப்பாற்றுவதற்காக இந்த யோசனைகள் முன்வைக்கப்படுகின்றனவோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

தூய்மைப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்வது பணியாளர்களின் நுரையீரலை பாதிக்கும் என்பது மட்டுமின்றி, அது கண்ணியமான வாழ்க்கைக்கும் வழி வகுக்காது. அதனால் அவர்கள் தொடர்ந்து தூய்மைப் ப்ணி செய்ய அனுமதிக்கப்படக்கூடாது. ஆனால், அதற்கு முன்பாக தூய்மைப் பணியில் இருந்து மீட்கப்படும் பணியாளர்களுக்காக என்னென்ன மாற்றுப் பணிகள் வழங்கப்படவுள்ளன என்பதை அரசு வரையறுக்க வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ஒரு தூய்மைப் பணியாளர் 5 அல்லது 7 ஆண்டுகள் பணி செய்த பின் அப்பணியில் இருந்து மீட்கப்படும் போது அவருக்கு அரசுத் துறைகளில் கல்வித் தகுதிக்கு ஏற்ற நிரந்தரப் பணி வழங்குதல், ஒவ்வொருவருக்கும் இயல்பாக கிடைக்கும் ஓய்வுக்கால பயன்களை விட கூடுதலாக 50% மானியத்துடன் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கி தொழில் முனைவோர் ஆக்குதல் போன்ற மாற்று வாழ்வாதாரத் திட்டங்களை வகுக்க வேண்டும். அதை செய்யாமல் தூய்மைப் பணியாளர்களை பணி நிலைப்பு செய்யக்கூடாது என்று கூறுவது அவர்களை அரசும், தனியார் நிறுவனங்களும் சுரண்டுவதற்கு துணைபோவதாகவே அமையும்.

தூய்மைப்பணியாளர்களுக்கு இத்தகைய மாற்று வாழ்வாதாரங்கள் வழங்கப்பட்டாலும் கூட, அவர்கள் பணி செய்யும் காலத்தில் நிலையான பணியாளர்களுக்குரிய ஊதியம் மற்றும் பிற உரிமைகள் வழங்கப்பட வேண்டும். இது பற்றியெல்லாம் எதுவும் பேசாமல் தூய்மைப் பணியாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கக்கூடாது என்று மட்டும் வலியுறுத்துவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். சமுகநீதி என்ற பெயரில் தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படுவதற்கு எவரும் துணை போகக்கூடாது என்று வலியுறுத்துகிறேன்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x