Published : 18 Aug 2025 06:27 AM
Last Updated : 18 Aug 2025 06:27 AM
சென்னை: தமிழக அரசால் நடத்தப்பட்டு வரும் தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசால் நடத்தப்படும் தோழி விடுதிகளில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பணிபுரியும் பெண்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தோழி விடுதிகளில் மாத வாடகைக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டிருப்பது, அப்பெண்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் மலிவான தங்குமிட வசதிகளை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் திமுக அரசு இந்த விடுதிகளை தொடங்கியது.
ஆனால் தனியாக ஜிஎஸ்டி வசூலிக்கப்படுவதால், பல விடுதிகளில் மாத வாடகை தற்போது ரூ.1,000-க்கும் மேல் கூடுதலாகிஉள்ளது. உதாரணமாக, அடையாறில் இருவர் தங்கும் குளிர்சாதன வசதி இல்லாத அறை வாடகை ரூ.5,800-ல் இருந்து ரூ.6,844-ஆக உயர்ந்துள்ளது.
தாம்பரத்தில் வாடகை ரூ.9,200-ஆக உயர்ந்துள்ளது. இந்த உயர்வு அங்கு தங்கி பணிபுரியும் பெண்களுக்கும், உயர்கல்விக்காக தயாராகும் பெண்களுக்கும் நிதிச்சுமையாக மாறியுள்ளது. இந்த விடுதிகள் ஆடம்பரத் தங்குமிடங்கள் அல்ல.
சமூக நலத் திட்டங்களின் ஓர் அங்கம் என்பதால், அவற்றை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வரப்கூடாது. பெண்களை சுயசார்புடையவர்களாக உருவாக்க வேண்டும் என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில், அவர்களது நிதிச்சுமையை ஜிஎஸ்டி வரி சுமத்தி கூட்டக் கூடாது. மத்திய அரசு தோழி விடுதிகளுக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க முன்வரவேண்டும். இவ்வாறு அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT