Published : 18 Aug 2025 05:57 AM
Last Updated : 18 Aug 2025 05:57 AM
சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 7 மாதங்களில், ரயில்களில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்தியதற்காக, 96 பேர் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப்பதிந்து, அபராதம் விதித்துள்ளனர். தமிழகத்தில் முக்கிய ரயில் நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் திகழ்கிறது.
இங்கிருந்து வடமாநிலங்கள், தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களுக்கு நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் வந்து செல்கின்றன. இதுதவிர, சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்திலிருந்து 150-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரயில் நிலையத்தில் தினசரி 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் இயக்கப்படும் ரயில்களில் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது ரயில்வே பாதுகாப்பு படையினர் வழக்குபதிந்து, நீதிமன்றம் மூலமாக அபராதம் விதித்து வருகின்றனர். அந்த வகையில், அற்பக் காரணங்களுக்காக, அபாயச்சங்கிலியை பிடித்து இழுத்து ரயில்களை நிறுத்துவோர் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படுகிறது.
ரயில் செல்வதில் தாமதம்: ரயில் பயணிகளின் அவசர மருத்துவத் தேவை மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு அபாயச் சங்கிலியை இழுத்து ஓடும் ரயிலை நிறுத்தலாம். ஆனால் தேவையின்றி அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்துவதால், ரயில் செல்வதில் தாமதம் ஏற்படுகிறது. இவ்வாறு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கடந்த 7 மாதங்களில் தேவையின்றி அபாயச் சங்கிலியை இழுத்து நிறுத்தியதாக 96 பேர் மீது ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் வழக்கு பதிந்துள்ளனர்.
இதுகுறித்து, சென்னை சென்ட்ரல் ஆர்பிஎஃப் ஆய்வாளர் மதுசூதன ரெட்டி கூறியதாவது: ரயில்வே சட்டம் 141 பிரிவின் கீழ், தேவையின்றி ரயில் அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்தால், சம்பந்தப்பட்டோருக்கு ரூ.1,000 அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
அதன்படி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விதிகளை மீறி, ரயில்களில் அபாயச் சங்கிலியை இழுத்ததாக, நடப்பாண்டில் ஜனவரி முதல் ஜூலை வரை 96 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023-ல் 210 பேர் மீதும், 2024-ல் 217 பேர் மீதும் வழக்குகள் பதியப்பட்டு, அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT