Published : 18 Aug 2025 05:30 AM
Last Updated : 18 Aug 2025 05:30 AM
சென்னை: சென்னை புறநகர் பகுதிகளில் உயர் மின் கம்பங்களை புதைவட மின் கம்பிகளாக மாற்றும் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். நுகர்வோருக்கு மின்சாரம் விநியோகிக்க உயரமான கம்பங்களில் மின் கம்பிகள் பொருத்தி அதன் வழியாக மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
ஆனால் நகர பகுதிகளில் அதிகப்படியான நெரிசல், உயர்ந்த கட்டிடங்கள் உள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அங்கே மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதைவட மின் கம்பிகள் பொருத்தப்பட்டன. ஆனால் கிராமப்புற, புறநகர் பகுதிகளில் உயர் கம்பங்களில் மின் கம்பிகள் வாயிலாகவே மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில் சென்னை நகரை சுற்றியுள்ள புற்நகர் பகுதிகளான பெரும்பாக்கம், புழல், வேளச்சேரி, மடிப்பாக்கம், தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் மக்கள் தொகை பெருக்கம் மற்றும் தொழில் வளர்ச்சியால், இந்த பகுதிகளில் உள்ள உயர் மின் கம்பங்கள் புதைவட மின் கம்பிகளாக மாற்ற முடிவு செய்யப்பட்டது.
விரைவில் புதிய டெண்டர் ஆனால் அதற்கான பணிகள் மந்த நிலையில் நடப்பதாக குற்றஞ்சாட்டும் மக்கள், பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அண்மையில் தாம்பரத்தில் மின் கம்பம் அருகே சென்ற இளைஞர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தை தொடர்ந்து இந்த பணிகளை விரைந்து முடிக்க கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: உலக வங்கியின் நிதியில் செயல்படுத்தப்படும் கடலோர பேரிடர் அபாய குறைப்பு திட்டத்தின் கீழ் சென்னை, கடலூர், நாகப்பட்டினத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தாழ்வழுத்த பிரிவில் 33,307 கி.மீ. உயரழுத்த பிரிவில் 2004 கி.மீ. மின் கம்பிகள் உயர் மின் கம்பங்களில் இருந்து புதைவட மின் கம்பிகளாக மாற்றப்படுகின்றன.
இதில் 40 சதவீத பணிகள் நிறைவுபெற்றுள்ளன. உயரழுத்த பிரிவில் பணிகள் முழுமையமாக முடிந்துள்ளன. தாம்பரம், பெரம்பூர், ஆவடி ஆகிய பகுதிகளில் ஒரு சில பிரிவுகளில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தென் சென்னை மற்றும் சென்னை புறநகரில் ஒரு சில பிரிவுகளில் பணிகள் முடிக்கப்படவில்லை. இந்த பணிகளுக்கு வழங்கப்பட்ட டெண்டர் நிர்வாக காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டது. விரைவில் டெண்டர் கோரப்பட்டு பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT