Published : 18 Aug 2025 05:22 AM
Last Updated : 18 Aug 2025 05:22 AM
சென்னை: வடசென்னை அனல் மின் நிலைய 3-ம் அலகில் செப்டம்பரில் முழுதிறனில் மின் உற்பத்தி செய்யப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.10,158 கோடி மதிப்பில் கட்டப்பட்ட வடசென்னை அனல் மின்நிலையத்தின் 3-வது அலகு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் திறக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில்தான் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
800 மெகாவாட் திறன் கொண்ட 3-வது அலகில் தற்போது சோதனை ஓட்டமாக 620 மெகாவாட் மட்டுமே உற்பத்தி இருக்கிறது. மேலும், அவ்வப்போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது நிலையான உற்பத்தி மேற்கொள்ளப்படுவதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இருப்பினும் வணிக ரீதியான உற்பத்தி இன்னும் தொடங்கப்படவில்லை. வணிகரீதியான உற்பத்தி என்றால் மின் நிலையத்தை முழுதிறனில் 72 மணி நேரம் தொடர்ந்து இயக்க வேண்டும். இதை பூர்த்தி செய்தால்தான் உற்பத்தியாகும் மின்சாரத்தை விற்க முடியும். இந்நிலையில். அடுத்த மாதம் முதல் முழு திறனில் மின் உற்பத்தி செய்யப்படும் என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சீரமைப்பு பணிகள் வட சென்னை அனல் மின் நிலைய 3-வது அலகில் இருந்த குறைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. பெரும்பாலான குறைகள் சரி செய்யப்பட்டுள்ளன. போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், தேவைக்கேற்ப பணியாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளதால் செப்டம்பர் முதல் வாரத்தில் 3-வது அலகு முழு திறனில் வணிக ரீதியில் செயல்பட தொடங்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT