Published : 18 Aug 2025 06:09 AM
Last Updated : 18 Aug 2025 06:09 AM
சென்னை: தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து சென்னையில் நேற்று விலங்குகள் நல ஆர்வலர்கள் பேரணியாகச் சென்றனர்.
தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டெல்லியில் உள்ள தெருநாய்கள் அனைத்தையும் பிடித்து காப்பகத்தில் அடைக்குமாறு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் பேரணியும் நடைபெற்றது.
இந்நிலையில், தெரு நாய்களை காப்பகத்தில் அடைக்கும் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விலங்குகள் நல அமைப்புகளைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் 500-க்கும் மேற்பட்டோர் சென்னை, புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் சாலையில் இருந்து பேரணியாகப் புறப்பட்டு, எழும்பூர் வழியாக ராஜரத்தினம் விளையாட்டரங்கம் வரை சென்றனர்.
பின்னர் பேரணியில் பங்கேற்ற விலங்குகள் நல ஆர்வலர்கள் கூறியதாவது: தெரு நாய்களை காப்பகங்களில் அடைப்பது தீர்வாகாது. அவற்றுக்கு கருத்தடை செய்வது மட்டுமே தீர்வாகும். நகர்ப்புறங்களில் திருட்டைத் தடுப்பதில் தெரு நாய்கள் முக்கிய பங்காற்றுகின்றன. தெரு நாய்களும் நம்மை போன்ற உயிரினம்தான். அதற்கும் இந்த உலகில் வாழ உரிமை இருக்கிறது.
நாய்களிடம் அணுகத் தெரியாதவர்கள் தான் நாய்களைக் கண்டு அஞ்சுகின்றனர். அளவற்ற அன்பையும், விசுவாசத்தையும் அவை மனிதர்களுக்கு வழங்குகின்றன. அதனால் இவற்றை காப்பகத்தில் அடைக்கும் நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.
ரேபிஸ் நோய் தொற்று ஏற்பட்ட நாய்கள், பலரை கடிக்கும் நாய்களை காப்பகங்களில் அடைப்பதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ரேபிஸ் நோய் தாக்கப்பட்ட தெரு நாயை கருணைக் கொலை கூட செய்யுங்கள். குரலற்ற தெரு நாய்களை காப்பகங்களில் அடைத்து அவற்றை துன்பப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT