Published : 18 Aug 2025 08:32 AM
Last Updated : 18 Aug 2025 08:32 AM
திமுக மேயர்களுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. கோவை, நெல்லை, மதுரை, சேலம், காரைக்குடி மேயர்களைத் தொடர்ந்து இப்போது திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமாருக்கு எதிராகவும் திமுக-வினர் போலீஸ் பஞ்சாயத்து வரைக்கும் போயிருக்கிறார்கள்.
தேமுதிக இறக்குமதியான திருப்பூர் மேயர் ந.தினேஷ்குமார் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளராகவும் இருக்கிறார். இவருக்கும், சீனியரான மத்திய மாவட்டச் செயலாளர் க.செல்வராஜூக்கும் ஆரம்பத்திலிருந்தே அவ்வளவாய் பிடிக்காது. போதாதுக்கு மாநகர் வடக்கு செயலாளர் தங்கராஜுக்கு எதிராகவும் தினேஷ்குமார் காய்நகர்த்தியதால் அவரும் இப்போது தினேஷ்குமாருக்கு எதிராக நிற்கிறார்.
இந்நிலையில், பாஜக-வினருடன் இணைந்து தினேஷ்குமார் தனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டியதாகச் சொல்லி திருப்பூர் மாநகர காவல் ஆணையரிடம் இளைஞரணி நிர்வாகியான ஆனஸ்ட் ராஜ் என்பவர் புகார் அளித்து பரபரப்பைப் பற்றவைத்திருக்கிறார். இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, “வெங்கமேடு பகுதியில் சமீபத்தில், இளைஞர்களுக்குள் ஒரு பிரச்சினை. அதை எனது நண்பர் முத்துவேல் மூலமாக நான் சுமுகமாக பேசிமுடிக்க வைத்தேன். ஆனால் எங்கள் கட்சியைச் சேர்ந்த குட்டிகுமார், பாஜக-வைச் சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட சிலர் சரவணன் என்பவரின் மண்டையை உடைத்து, அதற்குக் காரணம் நாங்கள் தான் என போலீஸில் புகாரளிக்க வைத்திருக்கிறார்கள்.
சரவணனை ஆம்புலன்ஸில் ஏற்றி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவருக்கு திமுக-வில் முக்கிய பொறுப்பு வாங்கித் தருவதாக குட்டிகுமார் சொல்லி இருக்கிறார். இதற்கு பின்புலமாக திருப்பூரின் முக்கிய ’மக்கள் பிரதிநிதி’யும் இருந்ததாக சரவணனே எங்களிடம் சொன்னார். அதனால் இந்த சதிச்செயலுக்கு திட்டம் வகுத்த வினோத்குமார், குட்டிகுமார், மேயர் தினேஷ்குமார் ஆகியோர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தேன். சொந்தக் கட்சிக்காரனை வீழ்த்த எதிர்க்கட்சிக் காரனுடன் மேயர் இப்படி கைகோத்து செயல்படுவது எனக்கு வேதனையளிக்கிறது. இதுகுறித்து உரிய ஆதாரங்களுடன் தலைமைக்கும் புகார் தெரிவித்துள்ளோம்” என்றார்.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய வடக்கு மாவட்ட திமுக-வினர் சிலர், “இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆனஸ்ட்ராஜ் கபடி போட்டி ஒன்றை நடத்தினார். அப்போது குட்டிகுமார், வினோத்குமார் ஆகியோருடன் அவருக்கு தகராறு ஏற்பட்டது. அது தொடர்பாக அப்போது வினோத்குமார் கைதும் செய்யப்பட்டார்.
இப்போது நடந்திருக்கும் பிரச்சினைக்கு இதுதான் முன்பகை. சமீபத்தில் நடந்த வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில், திமுக-வினர் சிலரே குட்கா விற்பனையில் ஈடுபட்டு அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்துவதாக சிலர் பிரச்சினை செய்தார்கள். இந்த விவகாரம் கைகலப்பு வரைக்கும் போய் அடங்கியது. இதற்கும் வடக்கு மாவட்ட திமுக-வில் நிலவும் கோஷ்டி அரசியல் தான் காரணம். பிரச்சினைகளை சரிசெய்ய மாவட்ட திமுக-வை நான்காக பிரித்தாலும் திருப்பூரையும் திமுக கோஷ்டி பிரச்சினைகளையும் பிரிக்கவே முடியவில்லை” என்றனர்.
திருப்பூர் மாநகர் வடக்கு திமுக செயலாளர் தங்கராஜிடம் இதுகுறித்து பேசினோம். “சரவணன் தாக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பிரச்சினையை பகுதிச் செயலாளர் அல்லது வட்டச்செயலாளர் மட்டத்திலேயே முடித்திருக்கலாம். இதில் மாவட்டச் செயலாளர் தலையிட்டிருக்க வேண்டியதில்லை. இந்த சம்பவத்தின் பின்னணியில் பாஜக பிரமுகரும் இருந்துள்ளதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது” என்றார் அவர்.
மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டதற்கு, ‘‘புகார் அளித்த நபர்கள் சொல்லும் ஆடியோ, வீடியோவை நீங்களும் கேளுங்கள், பாருங்கள். அது திட்டமிட்டு காயப்படுத்தும் செயல். என்னிடமும் சில ஆடியோக்கள் இருக்கின்றன. ஒரு பிரச்சினை சம்பந்தமாக எனக்கு போன் செய்து பேசுபவர்களிடம் நான் என்ன பதில் சொல்ல முடியும்? ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப்பெரிதாக்கி திமுக தலைமைக்கும் புகார் அனுப்பி இருக்கிறார்கள். உண்மை என்ன என்பதை கட்சித்தலைமை முடிவு செய்யும். கட்டுக் கதைகளையும் கபட நாடகங்களையும் காலம் அம்பலப்படுத்தும்’’ என்றார்.
எதிர்க்கட்சிகளுக்கு வேலை வைக்காமல் ஆளும் கட்சியினர் தங்களுக்குத் தாங்களே இப்படி அகழி வெட்டிக் கொண்டிருப்பதை என்னவென்று சொல்வது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT