Published : 18 Aug 2025 08:21 AM
Last Updated : 18 Aug 2025 08:21 AM
அன்வர் ராஜா, மைத்ரேயன் என அதிமுக முக்கிய தலைகள் எல்லாம் அந்தக் கட்சிக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், இரண்டாம்கட்ட தலைவர்களை வளரவிடாமல் தன்னை ஜெயலலிதாவாக நினைத்துக் கொண்டு சர்வாதிகாரி போல் நடந்துகொள்கிறார் என இபிஎஸ்ஸுக்கு எதிராக சர்ச்சையைக் கிளப்புகிறார்கள்.
பணிவானவர், விசுவாசமானவர் என்பதால் தான் சிறை செல்லும் முன்பாக இபிஎஸ்ஸை முதல்வர் இருக்கையில் அமர்த்திவிட்டுச் சென்றார் சசிகலா. ஆனால் அவரிடம் அநியாயத்துக்கு பணிவுகாட்டி பதவிக்கு வந்த பழனிசாமி, அடுத்த சில நாட்களிலேயே தனது இன்னொரு முகத்தையும் காட்ட ஆரம்பித்தார்.
சீக்கிரமே அதிகார அரசியலைப் படித்த இபிஎஸ், தனக்கு வாழ்வழித்த சசிகலாவையும் அவரது அதிகார மையமாக இருந்த தினகரனையும் கொஞ்சமும் யோசிக்காமல் கட்சியைவிட்டு தூக்கி எறிந்தார். அடுத்து, தனக்கு அடுத்த நிலையில் இருந்த ஓபிஎஸ்ஸுக்கும் கொஞ்சம் கொஞ்சமாக நெருக்கடி கொடுத்து அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் அதிமுக-வை விட்டு துரத்தினார்.
இப்படி, தனது தலைமைக்கு போட்டியாக வருவார்கள் என சந்தேகப்பட்ட தலைகளை எல்லாம் கட்சியிலிருந்து களை எடுத்த இபிஎஸ், எதிர்காலத்திலும் தனது தலைமைக்கு போட்டியாக யாரும் வந்துவிடக் கூடாது என்பதிலும் மிகக் கவனமாக காய் நகர்த்துவதாகச் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் ஜெயலலிதா எப்படி கட்சியின் ஒற்றை முகமாக இருந்தாரோ அதேபோல் இப்போது இபிஎஸ் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தி வருவதுடன், இரண்டாம் கட்ட தலைவர்களை தட்டிவைப்பதிலும் உஷாராக இருக்கிறாராம்.
எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி என்பதால் செங்கோட்டையன் மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் இபிஎஸ். ஆனால் இடையில், ‘அடுத்த முதல்வர் வேட்பாளராக செங்கோட்டையன் வரலாம்’ என்ற செய்திகள் கசிய ஆரம்பித்ததும் விழித்துக் கொண்ட இபிஎஸ் தரப்பு, செங்கோட்டையனை மெல்ல ஓரங்கட்ட ஆரம்பித்தது. இபிஎஸ் முதல்வராக இருந்த போது அவருக்கான ‘டெல்லி மூவ்’களை தங்கமணியும் வேலுமணியும் தான் முன்னின்று கவனித்துக் கொண்டார்கள்.
ஆனால், ஆட்சி மாறியதும் அவர்கள் விஷயத்திலும் அலார்ட் ஆனார் இபிஎஸ். வேலுமணி டெல்லி பிணைப்பில் இருப்பதால் அவரை இபிஎஸ்ஸால் விலக்கிவைக்க முடியவில்லை. ஆனால், உறவுக்காரராக இருந்தும் தங்கமணியை தள்ளிவைக்க ஆரம்பித்தார். அண்மையில் இதைத் தெரிந்து கொண்டு தங்கமணி தரப்புக்கும் வலை வீசிப் பார்த்தது திமுக தரப்பு.
இவர்களைப் போலவே தான் செல்லூர் ராஜூவும் இபிஎஸ்ஸின் தீவிர விசுவாசியாக இருக்கிறார். ஆனால், அப்படிப்பட்டவரையும் அண்மையில் தென் மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது இபிஎஸ் தனது காரில் ஏறவிடாமல் தடுத்து அவமானப்படுத்திவிட்டதாக ஆதங்கப்பட்டிருக்கிறார் ஓபிஎஸ். மதுரையில் தன் வீட்டுப் பணம் ‘லம்பாக’ கொள்ளை போன விவகாரத்தில் உதவி கேட்டு மாவட்ட அமைச்சர் உள்ளிட்ட திமுக தலைகளிடம் பேசினார் என்பதால் செல்லூரார் மீது இபிஎஸ்ஸுக்கு வருத்தம் என்கிறார்கள்.
இதேபோல் கடந்த 13-ம் தேதி செய்தியாளர்கள் சந்திப்பில், தனதருகில் இருந்த எம்பி-யான தம்பிதுரை, பதில் சொல்ல முற்பட்ட போது இபிஎஸ் அவரது கையில் வேகமாக தட்டி தடுத்ததும் இப்போது விவாதமாகி இருக்கிறது.
செல்லூர் ராஜு மற்றும் தம்பிதுரைக்கு நேர்ந்த அனுபவத்தை அறிக்கையில் சுட்டிக்காட்டி இருக்கும் ஓபிஎஸ், ‘அறிவு, அனுபவம், மேலாண்மை திறன், மனிதர்களை மதித்து நடந்துகொள்ளும் பண்பு இது நான்கும் சேர்ந்தது தான் தலைமைப் பண்பு. ஆனால், அதற்கான அறிகுறிகள் சிறிதும் இல்லாத பழனிசாமியிடம் அதிமுக சிக்கிக்கொண்டு விட்டது’ என ஆதங்கப்பட்டிருக்கிறார்.
இதுகுறித்து அதிமுக செய்தித்தொடர்பாளரான காசிநாத பாரதியிடம் பேசினோம். “அதிமுக-வுக்கு எடப்பாடியார் தலைவராக வந்த பிறகு தான் மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. அப்படி இருக்கையில், கட்சியைக் கெடுத்துவிட்டார், கட்சியை அழித்துவிட்டார் என்றெல்லாம் அவருக்கு எதிராக குறை சொல்லமுடியாதவர்கள், இரண்டாம்கட்ட தலைவர்களை அவமதிக்கிறார், அவர்களை வளரவிடாமல் தடுக்கிறார் என்றெல்லாம் அபாண்டமாய் பழிபோடுகிறார்கள்.
இதை எல்லாம் பொய்யாக்கி 2026 தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராக அமர்ந்து அம்மாவை விட பெரிய அம்மாவாக இபிஎஸ் திகழப்போவதை இந்த நாடு பார்க்கத்தான் போகிறது” என்றார் அவர்.
அதிமுக செய்தித் தொடர்புச் செயலாளர் வைகைச் செல்வனோ, “கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்கள் முதல் அடிமட்ட தொண்டர்கள் வரை அனைவருக்கும் உரிய மரியாதையையும், அவரவர்களுக்கு உரிய இடத்தையும் எடப்பாடியார் கொடுக்க தவறுவதில்லை” என்று அழுத்தமாகவே சொன்னார். அவமானப்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் தம்பிதுரையும் செல்லூர் ராஜூவும் இதை ஏற்றுக் கொண்டால் சரிதான்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT