Published : 18 Aug 2025 06:03 AM
Last Updated : 18 Aug 2025 06:03 AM
தருமபுரி: தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பி தமிழகத்தின் மொழி, இன உணர்வுகளை அணையாமல் பார்த்துக் கொள்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். தருமபுரி அடுத்த தடங்கம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற விழாவில், ரூ.363 கோடியில் முடிவுற்ற 1,073 திட்டங்களை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், ரூ.513 கோடியில் 1,044 பணிகளுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார். மேலும், 70,427 பயனாளிகளுக்கு ரூ.830 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை தருமபுரிக்கு தந்தது திமுக அரசு தான். கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.447 கோடியில் 43.86 லட்சம் பயனாளிகளுக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் திமுக அரசு குறித்து சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிபடி ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே விடியல் பயணம் திட்டத்துக்கு கையெழுத்திட்டேன். தற்போது கர்நாடகா, ஆந்திர மாநிலங்களிலும் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகின்றனர்.
வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னோடியாகவும், இந்தியாவுக்கே திசைகாட்டியாகவும் திராவிட மாடல் அரசு உள்ளது. இதை பொறுக்க முடியாமல்தான் ஆட்சிக்கு எதிராக சில விஷமிகள் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர்.
எதிர்க்கட்சிகளைவிட மலிவான அரசியல் செய்கிறார் ஆளுநர் ரவி. திமுக ஆட்சி மீது அவதூறு பரப்புவது, திராவிடத்தை பழிப்பது, சட்டங்களுக்கு ஒப்புதல் தர மறுப்பது, தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதிப்பது, தமிழக மாணவர்களை இழிவுபடுத்துவது, கல்வி, சட்டம்-ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு குறித்தெல்லாம் உண்மைக்குப் புறம்பான தகவல்களைக் கூறி பீதியை கிளப்பும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
தலைசிறந்த மாநிலம்... ஆனால், இந்தியாவிலேயே தமிழகம் தலைசிறந்த மாநிலமாக உள்ளதாக மத்திய அரசின் புள்ளி விவரங்கள் குறிப்பிடுகின்றன. பள்ளிக் கல்வியில் நாட்டிலேயே தமிழகம் 2-வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளோம். தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைபடி, பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம் நடக்கின்றன.
ஆளுநர் மூலம் மத்திய பாஜக அரசு இழிவான அரசியல் செய்து வருகிறது. எனினும், ஆளுநர் ரவி தமிழகத்தில்தான் இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவரால்தான் தமிழகத்தில் மொழி, இன உணர்வு மற்றும் திராவிட இயக்கக் கொள்கை உணர்வு பட்டுப் போகாமல் உள்ளது. இந்த கொள்கை நெருப்பை அணையவிடமால் பார்த்துக் கொள்ளும் வேலையை ஆளுநர் ரவி சிறப்பாக செய்து வருகிறார்.
எனவே, அடுத்தும் திமுக ஆட்சிதான் அமையும். நாட்டிலேயே அனைத்துத் துறையிலும் வளர்ந்த மாநிலமாக தமிழகத்தை உயர்த்துவோம். இவ்வாறு முதல்வர் பேசினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பெரியகருப்பன், எ.வ.வேலு, ராஜேந்திரன் மற்றும் எம்.பி. எம்எல்ஏ-க்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இணைய வழியில் பயிர்க்கடன்: முன்னதாக, அதியமான்கோட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் நடந்த விழாவில், இணைய வழியில் பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார். அவர் பேசும்போது, “இது நாட்டிலேயே முன்னோடித் திட்டமாகும். இனி வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் பயிர்க்கடனுக்கு விண்ணப்பித்து, அன்றே வங்கிக் கணக்கில் கடன்தொகையைப் பெற்று விவசாயிகள் பயனடையலாம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT