Published : 18 Aug 2025 05:11 AM
Last Updated : 18 Aug 2025 05:11 AM
சென்னை: ராமதாஸ் தலைமையில் நடந்தது பாமக பொதுக்குழுக் கூட்டம் கிடையாது. அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் கட்சியை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது என்று கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.பாலு தெரிவித்துள்ளார். ராமதாஸ், அன்புமணிக்கிடையேயான பிரச்சினை தொடரும் நிலையில், அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் கடந்த 9-ம் தேதி நடைபெற்றது.
இதில் தலைவராக அன்புமணி, பொதுச் செயலாளராக வடிவேல் ராவணன், பொருளாளராக திலகபாமா உள்ளிட்டோர் அடுத்த ஓராண்டுக்கு அந்த பொறுப்புகளில் தொடர்வார்கள் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தக் கூட்டம் செல்லாது என்று ராமதாஸ் தெரிவித்தார்.
இந்நிலையில், ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் பட்டானூரில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பாமக நிறுவனர் மற்றும் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், கூட்டணி குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது.
இதுகுறித்து கட்சியின் செய்தித் தொடர்பாளர் கே.பாலு கூறும்போது, “பாமக அமைப்பு விதிகள் 15, 16 ஆகியவற்றின் அடிப்படையில் கட்சியின் பொதுக்குழு உள்ளிட்ட எந்தக் கூட்டமும் பொதுக்குழுவால் தேர்வு செய்யப்பட்ட கட்சியின் தலைவர், பொதுச் செயலாளர் ஆகியோரால் கூட்டப்பட்டு, பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவரின் தலைமையில்தான் நடத்தப்பட வேண்டும்.
அதன்படி, பாமக பொதுக்குழுக் கூட்டம் கடந்த 9-ம் தேதி மாமல்லபுரத்தில், பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சித் தலைவர் அன்புமணி தலைமையில் முறைப்படி நடத்தப்பட்டது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த தகவல், இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், புதுச்சேரி பட்டானூரில் இன்று (நேற்று) நடத்தப்பட்ட கூட்டம் பாமகவின் பொதுக்குழுக் கூட்டம் அல்ல. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பாமகவை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT