Published : 18 Aug 2025 05:03 AM
Last Updated : 18 Aug 2025 05:03 AM
விழுப்புரம்: பாமக தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என சிறப்பு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் புதுச்சேரி அடுத்த பட்டானூரில் நேற்று நடைபெற்றது. நிறுவனர் ராமதாஸ் தலைமை வகித்தார்.
பொதுச் செயலாளர் முரளிசங்கர், மாநில அமைப்புச் செயலாளர் அன்பழகன், சேலம் மேற்கு எம்எல்ஏ அருள் உட்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். மேடையில் ராமதாஸுக்கு அருகிலேயே, அவரது மகள் ஸ்ரீகாந்தி அமர்ந்திருந்தார். கவுரவத் தலைவர் ஜி.கே. மணி தீர்மானங்களை வாசித்தார்.
அங்கீகாரத்தை இழந்த பாமகவை மீண்டும் பலப்படுத்த கட்சியின் அமைப்பு விதி 13-ல் திருத்தம் செய்து, பாமக தலைவராக ராமதாஸ் தொடர்ந்து செயல்படுவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டபோது, நிர்வாகிகள், தொண்டர்கள் பலத்த ஆரவாரம் செய்தனர். மேலும், சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைக்கும் முழு அதிகாரம் ராமதாஸுக்கு வழங்கப்பட்டது.
கல்வி, வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு, தமிழகத்தில் பூரண மதுவிலக்கு, அனைத்து ஆறுகளிலும் 5 கி.மீ. தொலைவுக்கு ஒரு தடுப்பணை, காவிரி உபரிநீர் திட்டம், காவிரி-கோதாவரி திட்டம், தமிழை கட்டாயப் பாடமாக்குவது, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது, பெரிய மாவட்டங்களைப் பிரிப்பது, நந்தன் கால்வாய் திட்டம்,
ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவது, சுங்கச்சாவடி கட்டணத்தைக் குறைப்பது, தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து, 8 பேர் கொண்ட ஒழுங்கு நடவடிக்கை குழு தயாரித்த அறிக்கையை ஜி.கே.மணி வாசித்தார்.
அதில், சிறப்பு புத்தாண்டு பொதுக்குழுவில் மைக்கை தூக்கி வீசியது, பனையூரில் புதிய அலுவலகம் தொடங்கியது, தலைமைக்கு கட்டுப்படாமல் கட்சியை பிளவுப்படுத்தும் செயலில் ஈடுபட்டது, சமூக ஊடகங்களில் ராமதாஸ் உள்ளிட்டவர்களை அவதூறாக விமர்சிப்பது, தைலாபுரம் இல்லத்தில் ஒட்டுக்கேட்பு கருவி வைத்தது, அனுமதியின்றி பொதுக்குழு கூட்டத்தை நடத்தியது, ராமதாஸை சந்திக்க வருபவர்களை தடுத்து நிறுத்தியது.
பசுமைதாயகம் அமைப்பை கைப்பற்றியது, தலைமை அலுவலகத்தை இடமாற்றம் செய்தது. 40 தடவை ராமதாஸிடம் பேசியதாக பொதுவெளியில் பொய் பேசியது என அன்புமணி மீது 16 வகையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. கூட்டத்தில் நிறுவனர் ராமதாஸ் பேசும்போது, “கட்சியினர் மற்றும் மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்பேன். 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்காக தொடர்ந்து போராடுவோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT