Published : 17 Aug 2025 04:58 PM
Last Updated : 17 Aug 2025 04:58 PM

பணி நிரந்தரம் கோரிக்கை: தருமபுரியில் முதல்வரிடம் பகுதி நேர ஆசிரியர்கள் மனு

போராட்டத்தில் ஈடுபட்ட பகுதிநேர ஆசிரியர்கள் | கோப்புப் படம்

தருமபுரி: பணி நிரந்தரம் செய்யக் கோரி பகுதி நேர ஆசிரியர்கள், தருமபுரி வந்த முதல்வரிடம் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

அரசு நலத்திட்ட உதவிகள் தொங்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் இன்று தருமபுரி வந்தார். இந்நிகழ்வில், வேளாண் பெருங்குடி மக்கள் இணையவழியில் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களில் விண்ணப்பித்து, ஒரே நாளில் கடன் பெறும் நடைமுறையை முதல்வர் தொடங்கிவைத்தார்.

தருமபுரி மாவட்டத்தில் 362 கோடியே 77 லட்சம் ரூபாய் செலவிலான 1,073 முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்த முதல்வர், 512 கோடியே 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 1,044 புதிய திட்டப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு 830 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனிடையே, அதியமான் கோட்டையில் தொடங்கியிருக்கும் உழவர் நலன் காக்கும் இந்த முன்னோடித் திட்டம், விரைவில் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என முதல்வர் உறுதி அளித்தார்.

இதனிடையே, தருமபுரி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலினை தமிழ்நாடு பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட ஒருங்கிணைப் பாளர் கோ.ரமேஷ் மற்றும் மு.தருமலிங்கம் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் தமிழக அரசு பள்ளிகளில் நீண்ட காலமாக தற்காலிகமாக பணிபுரியும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.

இது குறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பபு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது: ”பகுதி நேர ஆசிரியர்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்து பிறகு 12,500 ரூபாய் சம்பளம் வழங்கப்படுகிறது. மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகை எதுவுமே கிடையாது என்பதால் இந்த குறைந்த சம்பளத்தில் இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பம் நடத்த முடியவில்லை. எனவே 15 ஆண்டு தொகுப்பூதியத்தை, தற்காலிக வேலையை ஒழித்து இனி காலமுறை சம்பளம், திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன் படி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று செந்தில்குமார் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x