Published : 17 Aug 2025 08:26 AM
Last Updated : 17 Aug 2025 08:26 AM

“தோற்றுப் போனால் அதிமுக வாக்கு வங்கியை பாஜக கபளீகரம் செய்துவிடும்!” - திமுகவில் இணைந்த வா.மைத்ரேயன் நேர்காணல்

தேர்தல் காலத்து பரபரப்புகளின் ஒரு பகுதியாக மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்தவர்களை மனமுவந்து வரவேற்றுக் கொண்டிருக்கிறது திமுக. அதிலும் குறிப்பாக, அதிமுக முன்னணி தலைவர்களை அதிமுக்கியத்துவம் கொடுத்து வரவேற்று பன்னீர் தெளிக்கும் திமுக தலைமை, அவர்களுக்கு உடனடியாக கட்சிப் பதவிகளை அளித்தும் பரவசப்படுத்துகிறது.

அந்தவகையில், ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தவரும் அதிமுக அமைப்புச் செயலாளர்களில் ஒருவருமான மருத்துவர் வா.மைத்ரேயனை அண்மையில் அறிவாலயம் அரவணைத்துக் கொண்டது. “அதிமுக தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்கிறது” என்ற குற்றச்சாட்டைச் சொல்லி திமுக-வில் இணைந்த மைத்ரேயனை ‘இந்து தமிழ் திசை’ சிறப்புப் பேட்டிக்காக தொடர்பு கொண்டோம்.

“என்னிடம் சிகிச்சை எடுக்கும் மருத்துவப் பயனாளி ஒருவருக்கு முக்கியமான சிகிச்சை ஒன்றை அளிக்க வேண்டி இருக்கிறது. அதை முடித்துவிட்டு பேசலாமா?” என்றவர், அதன்படியே சிகிச்சையை முடித்த கையோடு நம்மை அழைத்தார். இனி அவரது பேட்டி...

அதிமுக-வை பாஜக தலைமை இயக்குகிறது என்பதுதான் நீங்கள் அதிமுக-வை விட்டு விலகியதற்கு காரணமா?

அதிமுக - பாஜக கூட்டணி அமைப்பதில் ஏற்பட்ட குளறுபடிகள், தவறான மதிப்பீடு, கூட்டணி அமைத்த முறை, பழனிசாமி ஓடி ஒளிந்து கொண்டு டெல்லி சென்று அங்கே 4 கார்கள் மாறி அமித் ஷாவை சந்தித்துப் பேசியது, அப்படிப் பேசிவிட்டு வெளியே வந்த பிறகு, “தமிழர் நலனுக்காக மனு கொடுத்தேன்” என்று சொன்னது போன்றவை பிடிக்கவில்லை. அவர் அப்படி மனு கொடுத்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. “தமி​ழ​கத்​தில் என்​டிஏ கூட்​ட​ணிக்கு அதி​முக தான் தலை​மை; பழனி​சாமி தான் முதல்​வர் வேட்​பாளர்” என்று அமித் ஷா சொன்​னார். ஆனால், கூட்​ட​ணிக்கு தலை​வர் என்ற முறை​யில் பழனி​சாமி, அன்​றைய பேட்​டி​யில் ஒரு முறை​கூட வாய் திறக்​க​வில்​லை. இப்​படி பாஜக-வுக்கு அடங்​கித்​தான் நடந்து கொண்​டிருக்​கி​றார் பழனி​சாமி.

2024 மக்​கள​வைத் தேர்​தலுக்கு முன்​பிருந்தே கடந்த 3 ஆண்​டு​களாக, “மெகா கூட்​டணி அமைப்​போம்” என்று சொல்லி வரு​கி​றார் பழனி​சாமி. ஆனால், இது​வரை எந்​தக் கட்​சி​யுமே கூட்​ட​ணிக்கு வரவில்​லை. உட்​கட்​சிக்​குள்​ளும் நிறையப் பிரச்​சினை​கள் உள்​ளன. சில முன்​னாள் அமைச்​சர்​கள், மாவட்​டச் செய​லா​ளர்​கள், எம்​எல்​ஏ-க்​கள் மட்​டும் இருந்​தால் போதும் என்று பழனி​சாமி நினைக்​கி​றார். அதனால் அவர்​களைத் தாண்டி மற்​றவர்​களை கண்​டு​கொள்​வ​தில்​லை. அவர்​களது கருத்​துகளை​யும் கேட்​ப​தில்​லை. இதையெல்​லாம் பார்த்​து​விட்​டுத்​தான் அதி​முக-வை விட்டு வெளி​யேறினேன்​.

கட்சி மாறிக்கொண்டே இருப்பது மைத்ரேயனுக்கு அலுப்பாக தெரியவில்லையா?

இருக்​கும் இடத்​தில் சந்​தோஷ​மாக, திருப்​தி​யாக, மனநிறை​வாக இருந்​தால் யாருமே கட்சி மாற​மாட்​டார்​கள்; மாற வேண்​டிய அவசி​ய​மும் இருக்​காது. இருக்​கும் இடம் சரி​யில்லை எனும்​போது அங்கே இருந்து மன உளைச்​சலுக்கு ஆளாவதை விட வெளியே வந்து சுதந்​திர காற்​றைச் சுவாசிப்​பது தான் நல்​லது.

ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த உங்களுக்கு திமுக-வில் இணைந்தது அவருக்கு செய்த நம்பிக்கைத் துரோகமாக தெரியவில்லையா?

நிச்​சய​மாக மறைந்த முன்​னாள் முதல்​வர் ஜெயலலி​தாவுக்கு நான் நம்​பிக்கை துரோகம் செய்​ய​வில்​லை. நான் அவரிடம் எந்த அளவுக்கு விசு​வாச​மாக இருந்​தேன் என்​பது கட்​சி​யில் உள்ள அனை​வ​ருக்​கும் தெரி​யும். அவருடன் இருக்​கும் வரை மட்​டுமல்ல, அவர் அளித்த எம்பி பதவி முடி​யும் வரை (2019) நான் எந்த வித​மான துரோகத்​தை​யும் செய்​ய​வில்​லை. துரோகம் என்ற வார்த்​தைக்கே இடமில்​லை. ஆனால், ஜெயலலிதா காலத்து அதி​முக வேறு, இப்​போது பழனி​சாமி தலை​மை​யில் இருக்​கும் அதி​முக வேறு. அதனால் தான் நான் அதி​முக-வை விட்டு வெளி​யேறினேன்​.

முன்னாள் பாஜக பிரமுகரான நீங்கள் பாஜக தலைமையின் இப்போதைய செயல்பாடுகளை எப்படி பார்க்கிறீர்கள்?

வாஜ்பாய், அத்வானி காலத்து பாஜக வேறு, இன்றைய நரேந்திர மோடி, அமித் ஷா தலைமையிலான பாஜக வேறு. அது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம்.

பாஜக உடன் அதிமுக மீண்டும் கூட்டணி வைத்ததை நீங்களும் ஏற்றுக்கொள்ளவில்லையோ?

மக்களவை தேர்தலில் கூட்டணி வைக்காமல், சட்டப்பேரவை தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைப்பதை நான் மட்டுமல்ல, அதிமுக-வில் இருக்கும் பெரும்பாலான தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்பது தான் உண்மை.

தேர்தல் சமயத்தில் பொதுவாக ஆளும் கட்சியிலிருந்து தான் விலகி ஓடுவார்கள்... ஆனால், நீங்களெல்லாம் ஆளும் கட்சியை நோக்கி வருகிறீர்களே..?

ஆளுங்கட்சியை நோக்கி பல தலைவர்கள் வருவதற்குக் காரணம், இன்றைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சி மக்கள் ஆதரவு பெற்ற ஆட்சியாக உள்ளது. நல்லாட்சி நாயகராக ஸ்டாலின் விளங்கி வருகிறார். அதனால் தான் திமுக-வை நோக்கி பலரும் வருகிறார்கள்.

திமுக உங்களை அழைத்ததா... நீங்களாகவே விரும்பி அறிவாலயத்துக்குப் புறப்பட்டீர்களா?

வாங்க, வாங்க என்று பிற கட்சியினரை அழைக்கும் நிலையில் இன்று திமுக இல்லை. அவர்கள் இன்று அதிகபட்ச பலம்வாய்ந்த அதிகாரத்தில் இருக்கிறார்கள். ஆகவே, நானே விரும்பித்தான் அறிவாலயம் நோக்கிப் புறப்பட்டேன்.

பிரபலங்கள் விலகி திமுக-வில் சேர்வதால் அதிமுக-வுக்கு பின்னடைவு ஏற்படும் என்று நினைக்கிறீர்களா?

ஏற்கெனவே அதிமுக பலவீனமாக இருக்கிறது. அங்கிருந்து பல முக்கிய தலைவர்கள் வெளியேறி வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள சூழலில், சென்ற மாதம் அன்வர் ராஜா, சென்ற வாரம் கார்த்திக் தொண்டைமான், இந்த வாரம் நான் என்று ஒவ்வொருவராக விலகி வருவது அதிமுக-வுக்கு நிச்சயமாக பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் இன்னும் பலர் அதிமுக-வை விட்டு வெளியேறுவார்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

திமுக ஆட்சிக்கு எதிராகவும் விமர்சனங்கள் இருக்கும் நிலையில் அதையும் தாண்டி அதிமுக-வை விட்டு விலக தனிப்பட்ட காரணம் என்ன?

​தி​முக ஆட்​சிக்கு எதி​ராக எதிர்க்​கட்​சிகள் தான் விமர்​சனம் செய்​கி​றார்​கள். சாதாரண மக்​கள் யாரும் விமர்​சிக்​க​வில்​லை. முதல்​வர் ஸ்டா​லின் கொண்டு வந்த மகளிர் உரிமைத் தொகை, மகளிர் விடியல் பயணம், தாயு​மான​வர் திட்​டம், நலம் காக்​கும் ஸ்டா​லின், உங்​களு​டன் ஸ்டா​லின் போன்ற பல்​வேறு திட்​டங்​கள் பொது​மக்​கள் மத்​தி​யில் நல்ல வரவேற்பை பெற்​றுள்​ளன. தமிழக மக்​களின் காவல​ராக முதல்​வர் ஸ்டா​லின் விளங்​கு​கி​றார்​.

ஓபிஎஸ் பக்கமிருந்துவிட்டு வந்ததால் உங்களுக்கு இபிஎஸ் உரிய அங்கீகாரம் அளிக்கவில்லை என்கிறார்களே... அது உண்மையா?

உண்மையாக இருக்கலாம். ஏனென்றால் நான் பழனிசாமி பக்கம் நிற்காததால் என் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.

எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரைச் சொல்லி வளர்ந்தவர்கள் அத்தனை எளிதில் திமுக-வை கிரகிக்க மாட்டார்கள் என்பார்களே..?

அது ஒரு தவறான வாதம். எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரைச் சொல்லி வளர்ந்தவர்கள், அவர்கள் இருக்கும்போது பெரிய அளவில் அதிமுக-வை விட்டு வெளியேறவில்லை. இப்போது பலர் வெளியேறி வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு இப்போது இருக்கும் தலைமை தான் காரணம்.

இந்தத் தேர்தலில் பிராமணர்களின் வாக்குகளை திமுக-வுக்கு சாதகமாக திருப்ப உங்களையும் எஸ்.வி.சேகரையும் திமுக பிரச்சார பீரங்கியாகப் பயன்படுத்தும் என்கிறார்களே..?

தனிப்பட்ட கட்சி என்ற முறையிலும், கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்தும் அசுர பலத்துடன் களத்தில் இருக்கிறது திமுக. என்னையோ, எஸ்.வி.சேகரையோ பயன்படுத்தி பிராமணர் வாக்குகளை பெற்றுத் தான் ஜெயிக்க வேண்டும் என்ற சூழ்நிலை இப்போது திமுக-வுக்கு நிச்சயமாக இல்லை.

2026 தேர்தல் அதிமுக கூட்டணிக்கு என்ன ரிசல்ட்டைத் தரும் என எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தத் தேர்தல் அதிமுக கூட்டணிக்கு மிகப்பெரிய தோல்வியை தரும். அதன் காரணமாக, தமிழகத்தில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் மக்கள் ஆதரவு பெற்ற ஒரே கட்சியாக திமுக தொடர்ந்து இருந்து வரும்.

தொண்டர்களை ஈர்த்து வைக்கும் வசீகரமான தலைமை இல்லாத சூழலில் ஒருவேளை, இந்தத் தேர்தலில் அதிமுக தோற்றுப் போனால் அந்தக் கட்சி என்னாகும்?

தொண்டர்களை ஈர்த்து வைக்கும் வசீகரமான தலைமை இல்லாத சூழ்நிலையில் அதிமுக தோற்றுப் போனால் அந்தக் கட்சியை, அதன் வாக்கு வங்கியை பாஜக கபளீகரம் செய்துவிடும் என்பதே பெரும்பாலான அதிமுக தொண்டர்களின் கவலையாக இருக்கிறது.

தனது சுயநலத்துக்காகவே பாஜக கூட்டணிக்கு ஒத்துக்கொண்டார் இபிஎஸ் என்கிறார்களே... அது உண்மையா?

தனது சுயநலத்துக்காகவே பாஜக கூட்டணியை கட்டி இழுக்கவேண்டிய கட்டாயத்தில் பழனிசாமி இருக்கிறார்.

ஜெயலலிதா காலத்தில் எஃகு கோட்டையாக இருந்த அதிமுக இப்போது, கூட்டணிக்காக கதவுகளை திறந்துவைத்துக் கொண்டு காத்திருக்கவேண்டிய நிலைக்கு போய்விட்டதே?

ஜெயலலிதா காலத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் போயஸ் தோட்டத்து வாசலில் வரிசையில் நின்று கொண்டிருப்பார்கள். அந்த நிலைமை எல்லாம் மாறி, இன்று கதவுகளை திறந்து வைத்திருந்தால் கூட ஒரு கட்சியும் வரவில்லை. 2024 மக்களவைத் தேர்தல் தொடங்கி இன்று வரைக்கும் பாஜக-வை தவிர வேறெந்தக் கட்சியும் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை.

தந்திரக்காரரான இபிஎஸ், கடைசி நேரத்தில் பாஜக-வை கூட்டணியிலிருந்து கழட்டிவிடவும் தயங்கமாட்டார் என்கிறார்களே?

பழனிசாமி தந்திரக்காரராக இருக்கலாம். ஆனால், இந்த முறை அவரால் பாஜக-வை கூட்டணியில் இருந்து கழட்டிவிட முடியாது. அதற்கு பாஜக அனுமதிக்காது.

திமுக-வில் நீங்கள் எதிர்பார்க்கும் அங்கீகாரம் உங்களுக்குக் கிடைக்கும் என நம்புகிறீர்களா... திமுக தலைமை உங்களுக்கு ஏதாவது உத்தரவாதம் அளித்திருக்கிறதா?

நான் எந்த விதமான நிபந்தனையும் இல்லாமல் ஸ்டாலினின் தலைமை ஏற்று திமுக-வில் இணைந்திருக்கிறேன். எனது தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற அங்கீகாரம் நிச்சயமாக திமுக-வில் கிடைக்கும். முதல்வர் ஸ்டாலின் அதைத் தருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x