Published : 16 Aug 2025 09:11 PM
Last Updated : 16 Aug 2025 09:11 PM
சேலம்: மதம், சாதி, கடவுள், இனத்தின் பெயரால் தமிழக மக்களைப் பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன; வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வெற்றி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் இந்திய கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
சேலத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 26-வது மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: தொழிலாளர் உரிமைகளுக்கான 44 சட்டங்களை நீக்கிவிட்டு, 4 சட்ட தொகுப்புகளாக சுருக்கி செயல்படுத்த மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது. விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களைத் திரும்ப பெற்றாலும், விவசாயிகளுக்கு தந்த வாக்குறுதி எதனையும் நிறைவேற்ற மத்திய அரசு மறுத்து வருகிறது.
பண மதிப்பிழப்பு, தன்னிச்சையான ஜிஎஸ்டி விதிப்பு காரணமாக, சிறு, குறு, நடுத்தரத் தொழில்களை அழித்து, பன்னாட்டுப் பெரும் குழும நிறுவனங்களின் ஏகபோகம் வளர பாஜக அரசு துணை செய்கிறது. ஜிஎஸ்டியில் தமிழகத்துக்கு உரிய பங்கீட்டை வழங்குவதில்லை. வங்கி, ரயில்வே போன்ற மக்களோடு தொடர்புடைய துறைகளிலும் கூட, வட மாநில ஊழியர்கள் தமிழகத்தில் நியமிக்கப்படுகின்றனர்.
கீழடியில் மக்கள் வாழ்ந்த காலத்தை அறிவியல் பூர்வமாக நிரூபித்த பின்னரும், அது போதாது என்கிறது மத்திய அரசு. ஆளுநரைப் பயன்படுத்தி, தமிழகத்தில் ஒரு போட்டி அரசை மத்திய அரசு நடத்துகிறது. மதம், சாதி, கடவுள், இனத்தின் பெயரால் தமிழக மக்களைப் பிளவுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சமூகம், அரசியல், பொருளாதாரம், கருத்தியல், பண்பாட்டுத் துறைகளில் பெரும் அச்சுறுத்தல்களை தமிழகம் எதிர்கொள்கிறது. இவற்றுக்கு எதிராக மதச்சார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி, முற்போக்கு சக்திகள் ஒருங்கிணைந்து வலிமை பெறுவது அவசிய தேவையாகிறது. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்), விடுதலைச் சிறுத்தைகள், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கட்சிகள் நீடிக்கின்றன
தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. பாஜகவால் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்பது ஒருபுறம் இருந்தாலும், அது தகிடு தத்தங்கள் மூலம் வளர்வதும் கூட தமிழகத்துக்கு பேராபத்தானது. அதனைத் தடுப்பதற்கு, வரும் சட்டப்பேரவை தேர்தலில், திமுக தலைமையிலான அணி மாபெரும் வெற்றி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகள் அமைய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த மாநாட்டில் இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா பேசும்போது, “தேர்தல் ஆணையம் அரசியல் அமைப்புக்கு உட்பட்டது. குடிமக்கள் அனைவருக்கும் வாக்குரிமை கிடைப்பதை அது உறுதி செய்ய வேண்டும். ஆனால், பிஹாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் கொண்டு வந்து, 65 லட்சம் பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கி உள்ளது. வாக்குரிமையை மக்கள் இழந்து விட்டால் ஜனநாயகம் பறிபோய்விடும். எனவே ஜனநாயகத்தை காக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார். வாசிக்க > “அரசால் தொழிலாளர் நலன் பாதித்தால் கம்யூனிஸ்டுகள் எதிர்ப்பர்” - சேலம் மாநாட்டில் பெ.சண்முகம் பேச்சு
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT