Published : 15 Aug 2025 06:52 PM
Last Updated : 15 Aug 2025 06:52 PM
சென்னை: திருச்செந்தூர் முருகன் கோயில் உள்பட தமிழகத்தில் முக்கியமான 12 கோயில்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்கள் மற்றும் பிராணிகள் சந்தித்து வரும் ஆபத்துகளை தவிர்க்கும் வகையில் தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கவும், விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து 2018-ல் அரசாணை பிறப்பித்தது. அந்த அரசாணையில் பிளாஸ்டிக் ஷீட், பிளாஸ்டிக் பேப்பர் கப், பிளாஸ்டிக் டீ கப், பிளாஸ்டிக் டம்ளர், தெர்மாகோல் கப், அனைத்து அளவு மற்றும் தடிமனான பிளாஸ்டிக் கேரி பேக் உட்பட 9 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையை தீவிரமாக அமல்படுத்தும் வகையில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற முக்கியமான 12 கோயில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து இந்து சமய அறநிலையத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து, சம்பந்தப்பட்ட கோயில் நிர்வாகத்துக்கு இந்து சமய அறநிலையத் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: “மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில், திருத்தணி முருகன் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், பழனி முருகன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில்,
சமயபுரம் மாரியம்மன் கோயில், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி ஆகிய 12 கோயில்கள் பிளாஸ்டிக் இல்லா கோயில்களாக அறிவித்திடும் வகையில், இக்கோயில்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.
மாற்றாக இயற்கை சார்ந்த பொருட்களை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இக்கோயில்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கான தடையை சீரிய முறையில் செயல்படுத்த வேண்டும்” என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT