Published : 15 Aug 2025 01:20 PM
Last Updated : 15 Aug 2025 01:20 PM
வேங்கை வயல் விவகாரம் தொடங்கி நெல்லையில் நடந்த இளைஞர் கவின் ஆணவக் கொலை, தற்போதைய தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் வரை திமுக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை மென்மையான போக்குடனே திருமாவளவன் கண்டிக்கிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. திருமாவளவன் செல்லும் திசை சரியா?
கடந்த காலங்களில் திமுக, அதிமுக என அரசியல் சூழலுக்கு ஏற்ப கூட்டணிகளை அமைத்தவர் திருமாவளவன். 2016 மூன்றாவது அணியாக மக்கள் நலக் கூட்டணியை உருவாக்கி படுதோல்வி அடைந்தபின்னர், விசிக 2019 மக்களவைத் தேர்தல் முதலே தொடர்ந்து திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது.
2024 தேர்தல் மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் அங்கீரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகவும் விசிக மாறியிருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியின்போது, பல்வேறு விவகாரங்களிலும் விசிக கடுமையான போராட்டங்களை நடத்தியது. மத்தியில் பாஜக – மாநிலத்தில் அதிமுக என இரு கட்சிகள் மீதும் 2021 வரை கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வந்தார் திருமாவளவன்.
2021ல் திமுக ஆட்சி அமைந்த பின்னர், தேவையான நேரங்களில் கூட அவர் அரசை விமர்சிப்பதில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.
2022 முதல் இப்போதுவரை திமுக அரசுக்கு பெரும் தலைவலியாக இருப்பது வேங்கைவயல் விவகாரம். குடிநீர் தொட்டியில் மலம் கலந்த வேங்கைவயல் கொடுமைக்கான நீதி இப்போது வரை கிடைக்கவில்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சேர்ந்த 3 பேரே காரணம் என சிபிசிஐடியால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை கடுமையாக எதிர்த்த திருமாவளவன், சிபிஐ விசாரணை வேண்டும் என்றார். மேலும், சில விமர்சனங்களையும் அரசு மீதும், காவல்துறை மீதும் முன்வைத்தார்
ஆனால் இதற்கு திமுக தரப்பில் பதிலளிக்கவில்லை என்றாலும், திக தலைவர் கி.வீரமணி, ‘வேங்கைவயல் விவகாரத்தை அரசியல் பிரச்சினையாக்கிக் குளிர் காய்வது என்பது சரியானதல்ல. குறிப்பாகக் கூட்டணி கட்சிகளுக்குப் பொறுப்பு அதிகமாகவே உண்டு.
தனிப்பட்ட பிரச்சினையை பொதுப் பிரச்சினையாக்கி சாதி முலாம் பூசுவது மிகப் பெரிய ஆபத்தாகும். பிரச்சினையை வேறு கண்ணோட்டத்தில் விமர்சிப்பது, அரசியல் லாபத்துக்காக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சாட்டும் குற்றச்சாட்டு நெருப்புக்குத் தெரிந்தோ தெரியாமலோ நெய் ஊற்றுவதாக அமைந்து விடாதா என்பதைச் சிந்திக்க வேண்டும்.எதற்கெடுத்தாலும் சிபிஐ விசாரணை தேவை என்பது வாடிக்கையான வழமையான குரலாக இருப்பது வேடிக்கையானது - வினோதமானது’ என்றார். கிட்டத்திட்ட திமுகவின் குரலாகவே அவர் பேசினார் என்பதே உண்மை.
சமீபத்தில் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தியது நெல்லையில் நிகழ்ந்த பட்டியலின இளைஞர் கவினின் ஆணவக் கொலை. இந்த ஆணவக் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கிய நிலையில், முதல்வரை சந்தித்த திருமாவளவன் ஆணவக் கொலைக்கு தனிச் சட்டம் இயற்ற கோரிக்கை வைத்தார்.
திமுக ஆட்சியமைத்தது முதலே இச்சட்டம் குறித்து இடதுசாரிகளும், விசிகவும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றன. ஆனால், ஆட்சியமைத்து 4 ஆண்டுகளை கடந்தும் இச்சட்டத்தை நிறைவேற்றாதது, திமுக மீது மட்டுமல்ல, கூட்டணியில் இருக்கும் விசிக மீதும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது.
அதேபோல தூய்மைப் பணியாளர்கள் போராட்டமும், அவர்களை அரசு அணுகிய விதமும், தடாலடியான கைது நடவடிக்கையும் திமுக மீது பெரும் விமர்சனங்களை தூண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசை மிகவும் மென்மையான போக்கில் திருமாவளவன் கண்டிக்கிறார். கைது விவகாரத்தில் கூட அரசை விமர்சிக்காமல், காவல்துறையை விமர்சிக்கிறார் என்றெல்லாம் எதிர் முகாமிலிருந்து குரல்கள் எழுகின்றன.
வேங்கைவயல் விவகாரம், கவின் ஆணவக் கொலை, தூய்மைப்பணியாளர்கள் போராட்டம், சாதிய வன்முறைகள் என விளிம்பு நிலை மக்களின் பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், அதற்கு தீவிரமான போராட்டங்களை முன்னெடுக்கும் விசிக போன்ற கட்சிகள் பெயரளவுக்கே போராடுவதாக அதிமுக - பாஜக தரப்பு விமர்சிக்கிறது. ‘திமுக கட்சி மீது விழும் பழிகளை எல்லாம் தாமாக முன்வந்து கூட்டணி கட்சிகள் சுமக்கின்றன’ என காட்டமாகவே விமர்சித்துள்ளார் இபிஎஸ்.
அதே நேரத்தில், தங்கள் அரசின் மீதான ஒவ்வொரு குற்றச்சாட்டும் பாஜகவுக்கு வலுசேர்க்கும் என்ற ஒரே வார்த்தையை வைத்து, எல்லா விவகாரங்களிலும் கூட்டணி கட்சிகளை திமுக அமைதியாக்கிவிடுகிறது என்ற விமர்சனத்தை முன்வைக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.
அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாக மாறியுள்ள விசிக கடந்த ஒரு வருடத்தில் மது ஒழிப்பு, மதசார்பின்மை காப்போம் என கவனிக்கத்தக்க மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் கணிசமான வாக்கு வங்கியும் அக்கட்சிக்கு உள்ளது. இதனையொட்டி இம்முறை திமுக கூட்டணியில் 20 தொகுதிகளுக்கு மேல் பெறவேண்டும் எனப் பேசி வருகின்றனர் விசிகவினர். அப்படியிருக்கையில் தற்போது விசிக மீது வைக்கப்படும் இந்த விமர்சனங்கள் அக்கட்சிக்கு பாதகமாகுமா என்பது தேர்தல் முடிவின்போதே தெரியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT