Published : 15 Aug 2025 05:13 AM
Last Updated : 15 Aug 2025 05:13 AM
சென்னை: ‘குஜராத், பிஹார், உத்தரப்பிரதேசத்தை விட வளர்ச்சியில் தமிழகம் பின்னோக்கி உள்ளது’ என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். தமிழக பாஜக சார்பில் 79-வது சுதந்திர தினத்தையொட்டி ‘இல்லந் தோறும் மூவர்ணக்கொடி’ என்ற தலைப்பில் சென்னை ஸ்டான்லி மருத்துவமனை அருகில் மூவர்ணக் கொடி யாத்திரை நடைபெற்றது. இதில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு யாத்திரையை தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சமூக நீதியை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு தகுதி இல்லை. ஜனநாயக முறையில் தங்களது கோரிக்கையை முன்வைத்து தூய்மை பணியாளர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்த அரசு தரப்பில் யாரும் தயாராக இல்லை. கரோனா காலத்தில் மக்கள் அனைவரும் பயத்தில் இருந்தபோது, தூய்மை பணியாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள் தங்களது உயிரை பணயம் வைத்து நாட்டுக்காக சேவை செய்தனர்.
ஆனால், முதல்வர் ஸ்டாலினுக்கு, தூய்மை பணியாளர்களின் கோரிக்கையை செவிக் கொடுத்து கேட்க நேரமில்லாமல், சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற கொடுங்கோல் ஆட்சிதான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அவர்கள் மீது அடக்குமுறையை ஏவி, தூய்மை பணியாளர்களை தாக்கியது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகள், ஆணையத்துக்கு அவர்களது கோரிக்கையை எடுத்து சென்று அவர்களுக்கு துணை நிற்பேன்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான் அரசு துறைகள் அதிகமாக தனியார் மயமாக்கப்பட்டன. தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது என திமுக அரசு ஒரு மாய பிம்பத்தை உருவாக்கி உள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை விட உத்தரப்பிரதேசம், பிஹார், குஜராத்தின் வளர்ச்சி மிக வேகமாக இருக்கிறது. இவர்களுடன் ஒப்பிடும்போது, நாம் பின்னோக்கி தான் இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சென்னையில் உள்ள தனது வீட்டிலும், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை சென்னையை அடுத்த பனையூரில் உள்ள தனது வீட்டிலும், தமிழிசை சவுந்தரராஜன் சாலிகிராமத்தில் உள்ள தனது வீட்டிலும் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT