Published : 14 Aug 2025 11:48 AM
Last Updated : 14 Aug 2025 11:48 AM
சென்னை: முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர் என்றும், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை என்றும் ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரம் அடையும் முன்பாக பிரிவினையை எதிர்கொண்டது. ஆகஸ்ட் 15, 1947ல் நாட்டின் சுதந்திரம் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாள் முன்பாக ஆகஸ்ட் 14, 1947 அன்று பாகிஸ்தான் தனி நாடாக பிரிந்தது. சுதந்திர தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், பிரிவினையால் நிகழ்ந்த பெரும் சோகத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது அறிக்கையில், “இன்று 'ஆகஸ்ட் 14' - பாரதம் தனது 5,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றில் ஒருபோதும் நடந்திராத சம்பவத்தை ஆழ்ந்த வேதனையுடன் நினைவுகூர்கிறது. பாரதத்தாயின் பல லட்சம் அப்பாவி குழந்தைகளைக் கொன்று, முஸ்லிம்களுக்கு ஒரு தனி நாடு என்ற அடிப்படையில் முஸ்லிம் லீக் அதன் வன்முறையைக் கட்டவிழ்த்தது.
முஸ்லிம் லீக்கால் 'காஃபீர்கள்' என்று முத்திரை குத்தப்பட்டதால், பல்லாயிரம் ஆண்டுகளாக தங்கள் மூதாதையர்கள் வாழ்ந்த நிலத்திலிருந்து லட்சக்கணக்கானவர்கள் வேரறுக்கப்பட்டனர். பிரிவினையின் காயங்கள் இன்னமும் ஆறவில்லை.
பல்வேறு போர்வையில் இதேபோன்ற சக்திகள் இன்றும் அதிகரித்து வருவதால், ஆழ்ந்த உணர்வுடன் இதே நாளை பாரதம் நினைவுகூர்கிறது. அவை பொய்கள் மற்றும் ஏமாற்றுச்செயல்கள் மூலம் தேசத்தின் தன்னம்பிக்கையை உடைக்கவும், நம் மக்களின் மன உறுதியைக் குலைக்கவும் முயல்கின்றன.
தேசத்தின் உறுதியை பலவீனப்படுத்தவும், வரலாற்றை திரும்பி நிகழ்த்தவும் நயவஞ்சகம் செய்யும் அவர்களை, தன்னம்பிக்கை கொண்ட சுயசார்பு பாரதத்தின் அற்புதமான எழுச்சியில் மகிழ்ச்சி கொள்ளாத வெளிவிரோத சக்திகள் ஊக்குவிக்கின்றன.
வளர்ச்சியடைந்த பாரதம் என்ற எண்ணத்தை நோக்கி நமது தேசம் அணிவகுத்துச் செல்லும் இந்த முக்கியமான காலகட்டத்தில், அவர்களின் தீய நோக்கத்துக்கு எதிராக ஒவ்வோர் பாரதியரும், குறிப்பாக தமிழ்நாட்டின் எனது சகோதர, சகோதரிகளும் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT