Published : 13 Aug 2025 04:17 PM
Last Updated : 13 Aug 2025 04:17 PM
சென்னை: சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஆளுநர் நடத்தும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘வழக்கம்போல ஆளுநர் சுதந்திர நாள் விழாவில் பங்கேற்கும்படி விசிகவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதற்காக அவருக்கு எமது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேவேளையில் வழக்கம்போல அவ்விழாவில் விசிக பங்கேற்காது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியும் ஆளுநர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருந்தது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாட்டு மக்களுக்கும், மண்ணின் உரிமைக்கும் பதவியேற்றக் காலத்திலிருந்தே எதிராக செயல்படும் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்தும், ஒன்றிய பாஜக. அரசின் தூண்டுதலின் பேரில் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தம் என்ற பெயரில் வாக்காளர் பட்டியலில் குளறுபடிகளை ஏற்படுத்தும் இந்தியத் தேர்தல் ஆணையத்தை கண்டித்தும், கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் உருவாக்குவதற்கான சட்ட மசோதாவை வேண்டுமென்றே காலம்தாழ்த்தி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதைக் கண்டித்தும், சுதந்திர தினத்தன்று அவர் அளிக்கும் தேநீர் விருந்தை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் புறக்கணிக்கின்றனர்’ எனத் தெரிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT