Published : 13 Aug 2025 02:50 PM
Last Updated : 13 Aug 2025 02:50 PM
மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி திமுக மேயரின் கணவர் பொன் வசந்த் கைதாகி உள்ள நிலையில், மண்டலத் தலைவர்களை போல் மாநகராட்சி மேயர் இந்திராணியின் பதவியும் பறிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மாநகராட்சி வட்டாரத்தை தாண்டி மதுரை அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி. இவரது கணவர் பொன் வசந்த், அமைச்சர் பழனிவேல் தியாக ராஜனின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அதற்கு பரிசாகவே பழனிவேல் தியாகராஜன், பொன்வசந்த் மனைவி இந்திராணியை மேயராக்கினார். கடந்த 20024-ம் ஆண்டு ஆணையராக இருந்த தினேஷ்குமார், 150 கட்டிடங்களில் சொத்துவரி முறைகேடு நடந்ததாக ‘சைபர் கிரைம்’ போலீஸில் புகார் செய்தார். ஆனால், உள்ளூர் ஆளுங்கட்சி அரசியல் அழுத்தத்தால் ஆணையர் கொடுத்த புகார் மீது கடந்த 7 மாதங்களாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், 150 கட்டிடங்களில் நடந்த சொத்துவரி குறைப்பு மட்டும் மறுசீரமைக்கப்பட்டு புதிய வரி விதிக்கப்பட்டது. ஆனால், மாநகராட்சியில் 100 வார்டுகளில் நடந்த பிற வணிக கட்டிடங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த குடியிருப்பு வரி, ‘ஏ’ கிரேடுக்கு பதில் ‘பி’ மற்றும் ‘சி’ கிரேடு விதிப்பும் மறுசீரமைக்கப்படாததால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டு நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் ஆணையராக சித்ரா பொறுப்பேற்ற பிறகு, திடீரென இந்த சொத்துவரி முறைகேடு வழக்கு வேகம் எடுத்தது. மத்திய குற்றப்பிரிவு போலீஸார் விசாரணைக்கு ஆணையர் அனுமதி வழங்கியதால் சொத்துவரி முறைகேடு புகாரை வழக்குப்பதிவு செய்து 15 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தொடர்புடைய உதவி ஆணையர் உள்பட 19 பேரை ஆணையர் சித்ரா ‘சஸ்பெண்ட்’ செய்தார்.
இந்த வழக்கில் விசாரணைக்கு அழைக்கப்பட்ட 5 மண்டலத் தலைவர்களும், 2 நிலைக்குழு தலைவர்கள் பதவிகளும் பறிக்கப்பட்டன. ஆனால், இந்த வழக்கில் எதிர்க்கட்சியினரால் குற்றம் சாட்டப்பட்ட மேயர் இந்திராணி, அவரது கணவர் பொன்வசந்த் ஆகியோர் மட்டும் விசாரணைக்குக் கூட அழைக்கப்படவில்லை. இது பதவி இழந்த மண்டலத் தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சொத்துவரி முறைகேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ததோடு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அதிமுக, இந்த வழக்கில் மேயர் இந்திராணி, அவரது கணவர் விசாரிக்கப்பட வேண்டும் என்றனர். கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சொத்துவரி விதிப்புக் குழு தலைவர் விஜய லெட்சுமியின் கணவர் கண்ணனின் வாக்கு மூலத்தில் மேயர் கணவர் பொன் வசந்த், மேயர் கணவரின் பி.ஏ.வாக இருந்த பொன்மணியின் கணவர் ரவி மூலம், பல்வேறு கட்டிடங்களில் சொத்து வரி முறைகேடு செய்ததாக தெரிவித்திருந்தார்.
அதனால், பொன்வசந்த் எந்த நேரத்திலும் விசாரணைக்கு அழைக்கப்படலாம் என மதுரை திமுக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில் நேற்று காலை மேயர் இந்திராணி, அவரது கணவரை பற்றி 2 பக்க அளவில் எழுதப்பட்ட புகார் கடிதத்தை, பதிவுத் தபால் மூலம் யாரோ மர்ம நபர்கள் 100 வார்டு கவுன்சிலர்களுக்கும் அனுப்பி வைத்திருந்தனர்.
இந்த கடிதத்தை யார் அனுப்பியது என்று போலீஸார் விசாரித்து வந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று இரவு சென்னையில் வைத்து, மாநகராட்சி மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த்தை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் போலீஸார் மற்றும் திமுக மேலிடத்தின் அதிரடி நடவடிக்கைகளால் மண்டலத் தலைவர்களைப் போல் இந்திராணியின் மேயர் பதவியும் பறிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
மேயராகவே செயல்பட்ட ‘பொன் வசந்த்’: இது குறித்து திமுகவினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் சிலர் கூறியது: மேயர் இந்திராணி பொறுப்பேற்ற நாள் முதல் பெயரளவுக்கு மட்டுமே அவர் மேயராக செயல்பட்டார். அவரது கணவர் பொன்வசந்த் தான், மேயர் பங்களாவில் அமர்ந்து கொண்டு அதிகாரிகள், ஊழியர்களை இயக்குவது, வார்டுகளில் ஊழியர்களுக்கு உத்தரவிடுவது, டெண்டர்கள் ஒதுக்கீடு செய்வது என மாநகராட்சி நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டு வந்தார். அதனால் மேயர் கணவருக்கும், ஆணையராக வந்தவர்களுக்கும் இடையே நீடித்த மோதல் ஏற்பட்டதால் 5 ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு மாநகராட்சி நிர்வாகம் ஒட்டுமொத்தமாக ஸ்தம்பித்தது.
மேயர் இந்திராணியின் தொடர்பு எண் தற்போது வரை அதிகாரிகளுக்கும், மண்டலத் தலைவர்கள், கவுன்சிலர்களுக்கும் வழங்கப்படவில்லை. மேயர் கணவர் பொன்வசந்த்தைத்தான் அனைவரும் தொடர்புகொள்ள வேண்டியிருந்தது. கடந்த சில மாதம் முன் பொன்வசந்த் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார். ஆனாலும், கடைசி வரை மாநகராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதை மட்டும் நிறுத்தவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT