Last Updated : 13 Aug, 2025 11:23 AM

5  

Published : 13 Aug 2025 11:23 AM
Last Updated : 13 Aug 2025 11:23 AM

திமுகவில் இணைந்தார் முன்னாள் எம்.பி மைத்ரேயன்: அதிமுகவில் அடுத்தடுத்து விழும் விக்கெட்!

சென்னை: அதிமுக அமைப்புச் செயலாளராக இருந்த டாக்டர் வா.மைத்ரேயன், இன்று (புதன்கிழமை) காலை மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அவர் இணைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், அவரை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக இபிஎஸ் வெளியிட்ட அறிக்கையில், “கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும்; கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்துகொண்டதாலும்; கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், டாக்டர் வா.மைத்ரேயன், முன்னாள் எம்.பி. கழக அமைப்புச் செயலாளர் இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.

யார் இந்த மைத்ரேயன்? - பிரபல மருத்துவரான வா.மைத்ரேயன் கடந்த 1991-ல் பாஜகவில் இணைந்து, மாநில செயற்குழு உறுப்பினர், மாநில அறிஞர் அணி தலைவர், பொதுச் செயலாளர், மாநில துணை தலைவர் என பல்வேறு பதவிகளை வகித்தார்.

பின்னர், 1999 -ம் ஆண்டு பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். 2002-ம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2017-ல் ஓபிஎஸ் தர்மயுத்தம் தொடங்கியபோது, அவரது அணியில் மைத்ரேயன் இருந்தார். கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், பழனிசாமி அணிக்கு தாவினார்.

பின்னர், 2022-ல் மைத்ரேயன், ஓபிஎஸ் முன்னிலையில் அவரது அணியில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2023 ஜூன் மாதம் அவர் பாஜகவில் இணைந்தார். பின்னர் மீண்டும் 2024-ல் அவர் அதிமுகவில் இணைந்தார்.

பாஜக, அதிமுக என ஸ்டன்டிங் அடித்த மைத்ரேயன் இன்று காலையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளார்.

அடுத்தடுத்த அதிமுக விக்கெட்.. 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், அதிமுக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார். பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் அதிருப்தியில் திமுகவில் இணைந்ததாக அவர் கூறினார். அவருக்கு தற்போது கழக இலக்கிய அணி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

அன்வர் ராஜாவை தொடர்ந்து புதுக்கோட்டை அதிமுக முன்னாள் எம்எல்ஏ கார்த்திக் தொண்டைமான் திமுகவில் இணைந்தார். “அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழகத்தில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற நோக்கத்தில் திமுகவில் இணைந்துள்ளேன்.” என்று அவர் கூறினார்.

இப்போது, அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன் அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்துள்ளார். “அதிமுக தலைமை என்ன செய்ய வேண்டும் என்பதை டெல்லி தலைமை தான் முடிவு செய்கிறது.” என்று பாஜகவின் ஆதிக்கத்தை முன்வைத்து வெளியேறியுள்ளார்.

சட்டப்பேரவை அல்லது மக்களவைத் தேர்தல்களுக்கு முன்னர் இத்தகைய கட்சித் தாவல்கள் ‘அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா’ வகையறாதான் என்றாலும்கூட, பாஜகவுடனான அதிமுக கூட்டணியை சுட்டிக்காட்டி அதிமுகவின் பிரபல முகங்கள் கட்சியிலிருந்து வெளியேறுவது மட்டுமல்லாது திமுகவுக்கு படையெடுப்பது திமுகவுக்கு சாதகமானதாகவே அமையும் என்கின்றனர் நிபுணர்கள்.

எந்த வகையில் என்றால், திமுக கூட்டணிக்குள் குழப்பம் என்று விமர்சனங்களை அள்ளித் தெளிக்கும் பழனிசாமிக்கு இது நிச்சயமாக தலைவலியாக அமையும் என்கின்றனர். “எங்கள் கூட்டணியில் குழப்பம் இருந்தால் உங்கள் கட்சியிலிருப்போர் ஏன் இங்கு அடுத்தடுத்து வரப்போகிறார்கள்.” என்று முன்வைக்கப்படும் விமர்சனங்களே போதும் அந்தத் தலைவலியை பழனிசாமிக்கு கொடுக்க என்கிறார்கள் நிபுணர்கள். தேர்தலுக்கான ’மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற இபிஎஸ் சுற்றுப்பயணத்துக்கு இடையே இந்த ஸ்பீட் பிரேக்கர்கள் குடைச்சல் தான், அந்தப் பயணத்துக்கு இடையே அதிருப்தியாளர்களை அடையாளம் கண்டு, அவர்களையும் சரிகட்ட வேண்டியிருக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும், இப்படி அதிமுக முகங்கள் திமுகவுக்கு படையெடுப்பது வாக்காளர்கள் மத்தியிலும் அதிமுக - பாஜக கூட்டணிக்கு கட்சிக்குள்ளேயே வரவேற்பில்லையே என்ற யோசனைக்கு வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x