Published : 13 Aug 2025 06:01 AM
Last Updated : 13 Aug 2025 06:01 AM
சென்னை: மலேசியாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானம் தரையிறங்கிய போது, ஓடுபாதையில் டயர்கள் உராய்ந்து வழக்கத்தைவிட அதிகமாகப் புகை வந்ததால்பரபரப்பு ஏற்பட்டது. மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சரக்கு விமானம் நேற்று அதிகாலை 4 மணிக்கு சென்னை பழைய விமான நிலைய சரக்கு விமானப் பகுதிக்கு வந்து தரையிறங்கியது.
அப்போது விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் உராய்ந்து, வழக்கத்தைவிட அதிகமாகப் புகை வந்ததைப் பார்த்த ஓடுபாதை பராமரிப்பு அதிகாரிகள், டயர் உராய்ந்து தீப்பிடிப்பதற்கான வாய்ப்புள்ளதாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இத்தகவல் விமான நிலைய தீயணைப்புத் துறைக்கும் சென்றது. உடனே தீயணைப்புத் துறையினர் அந்த சரக்கு விமானம் நின்ற பகுதிக்கு விரைந்து சென்று, விமானத்தை முழுமையாக சோதனை செய்து, விமான டயர்களையும் ஆய்வு செய்தனர். ஆனால் விமானத்தில் தீப்பிடிப்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை என்று தெரிவித்துவிட்டு சென்றனர்.
விமானப் பொறியாளர்கள் கூறுகையில், “விமானம் வந்து நின்றபோது, விமானத்தின் டயர்கள் ஓடுபாதையில் அழுத்தமாக உராய்ந்து கொண்டு ஓடியதால் புகை எழும்பியுள்ளது. வழக்கமாக நீண்ட தூர விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து தரையிறங்கும் போது, அதுபோல் ஏற்படுவது வழக்கம்” என்றனர்.
விமான பாதுகாப்பு அதிகாரிகள் சரக்கு விமானத்தை முழுமையாக ஆய்வு செய்து, விமானம் முழு பாதுகாப்புடன் உள்ளதாகத் தெரிவித்தனர். இதற்கிடையில், சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததாகவும், அந்த தீயை தீயணைப்பு வீரர்கள் வந்து அணைத்ததாகவும் தவறான தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தவறான தகவல் எப்படிப் பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT