Published : 13 Aug 2025 05:54 AM
Last Updated : 13 Aug 2025 05:54 AM
சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி பணி நீக்க காலத்தை பணிக் காலமாக மாற்ற கோரி நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் சென்னையில் நேற்று பேரணி நடத்தினர். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்ககாலத்தை பணிக்கால மாக மாற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதை செயல்படுத்த வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்த மேல்முறையீட்டை திரும்ப பெற்று, அரசாணையை வெளியிட வேண்டும். கருணை அடிப்படையில் பணி நியமனம் கேட்டு விண்ணப்பித்து 19 ஆண்டுகளாக காத்திருப்பவர்களுக்கு விரைந்து பணி வழங்க வேண்டும். மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைக்க வேண்டும்.
சாலைகளை தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடத்தில் மனு அளித்து, எழிலகம் வளாகத்தில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர்கள் சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் சங்கத்தின் மாவட்டத் தலைவர்களை, காவல்துறையினர் வீட்டு சிறை வைத்தனர். சென்னை நோக்கி வாகனங்களில் புறப்பட்டவர்கள் பல மாவட்டங்களில் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையும் மீறி எழிலகம் வந்தவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதைக் கண்டித்து சங்கத்தின் பொதுச் செயலாளர் அம்சராஜ் தலைமையில் 50 பேர் வாலாஜா சாலையிலிருந்து ஊர்வலமாக எழிலகம் நோக்கி சென்றனர். இவர்களையும் காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT