Published : 13 Aug 2025 05:34 AM
Last Updated : 13 Aug 2025 05:34 AM
சென்னை: வரும் சனிக்கிழமை (ஆக.16) கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை என்பதால், அன்றைய தினம் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறாது. அடுத்த வாரம் சனிக்கிழமை 38 மாவட்டங்களில் முகாம் நடைபெறும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று முதல்வரின் தாயுமானவர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சைதாப்பேட்டை மசூதி தெருவில் உள்ள வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இல்லத்துக்குச் சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் தரன், மோகன்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
அப்போது, மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள 34,809 ரேஷன் கடைகளுக்குட்பட்ட பகுதிகளில் 70 வயதை கடந்த முதியோருக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் ரேஷன் பொருட்களை, ரேஷன் கடைகளுக்குச் சென்று வாங்குவதற்கு மிகப்பெரிய இடையூறுகள் இருந்தன. பெரும்பாலும் 70 வயது கடந்தவர்களுக்கு அவர்களுடைய கைரேகையில் பிரச்சினை இருக்கும். கடைக்கு சென்று பொருட்களை காத்திருந்து வாங்கிவருவதற்கு, அவர்களால் இயலாத சூழ்நிலையும் இருக்கிறது.
1,256 இடங்களில் முகாம்: அதனால், 70 வயதை கடந்தவர்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வீடுகளுக்கே சென்று அவர்களின் உணவுப் பொருட்களை வழங்கும் மகத்தான திட்டம்தான் முதல்வரின் தாயுமானவர் திட்டம்.
நலம் காக்கும் ஸ்டாலின் எனும் திட்டம் மூலம் மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இத்திட்டம் தொடங்கப்பட்ட முதல் வாரத்தில் 44,418 பேரும், இரண்டாவது வாரத்தில் 48,418 பேரும் பயன் பெற்றுள்ளனர். வரும் 16-ம் தேதி சனிக்கிழமை அன்று கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை. அரசு அலுவலர்களுக்கான தொடர் விடுமுறை நாட்களாக இருப்பதால் அன்று முகாம் இல்லை.
இத்திட்டம் ஒவ்வொரு வாரமும் நடத்தப்படவுள்ளது. முதல் வாரம் 38 மாவட்டங்களிலும், இரண்டாவது வாரம் 36 மாவட்டங்களிலும் நடத்தப்பட்டது. வரும் வாரம் விடுமுறை என்பதால், அடுத்த வாரம் 38 மாவட்டங்களில் நடத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தை பொறுத்தவரை 6 மாத காலத்துக்குள் தமிழகம் முழுவதும் 1,256 இடங்களில் முகாம் நடத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழகத்திலுள்ள 388 வட்டாரங்களில் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் 3, சென்னை மாநகராட்சியில் 15 முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இதேபோல், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 5 மாநகராட்சிகளில் தலா 4 முகாம்களும் அதற்கு குறைவான மக்கள் தொகை கொண்ட 19 மாநகராட்சிகளில் தலா 3 முகாம்களும் நடத்தப்படவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT