Published : 13 Aug 2025 09:39 AM
Last Updated : 13 Aug 2025 09:39 AM
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறை (அமைச்சர்) ஐ.பெரியசாமிக்கு எதிராக அதிமுக கூட்டணியில் பாமக பொருளாளர் திலகபாமா போட்டியிட்டார். அப்போது, ஐபி 1 லட்சத்து 35 ஆயிரத்து 571 வாக்குகள் வித்தியாசத்தில் திலகபாமாவை தோற்கடித்தார். தற்போது அந்த வித்தியாசத்தை வைத்து விஜய் கட்சி தம்பிகள் போஸ்டர் ஒட்டி ஐபி-க்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக-வினர் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பிரச்சாரம் மூலம் மக்களைச் சந்தித்துப் பேசி வருகிறார்கள். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக-வோ, இபிஎஸ் வருகை அடுத்த மாத இறுதியில்தான் என்பதால் எந்தவித சலனமும் இல்லாமல் இருக்கிறது. அதனால் இடையில் புகுந்து தவெக-வினர் தான் இப்போது தடாலடி காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
அதில் ஓர் அதிரடியாக, கடந்த தேர்தலில் ஆத்தூர் தொகுதியில் ஐபி பெற்ற வாக்குவித்தியாசத்தைவிட இம்முறை ஒரு வாக்கு கூடுதல் வித்தியாசத்தில் ஆத்தூர் தொகுதியில் தவெக வாகை சூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் விதமாக போஸ்டர்களை ஒட்டினார்கள். ‘ஆத்தூர் தொகுதியில் 1,35,572 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூட தமிழக வெற்றிக் கழக தலைவர் 2026-ன் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர் எங்கள் தலைவரே வருக, வெல்க’ என இருந்த அந்த போஸ்டரைப் பார்த்துவிட்டு ஜிவ்வான திமுக-வினர் பதிலுக்கு போஸ்டர் கோதாவில் குதித்தார்கள்.
திமுக இளைஞரணியைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.வேல்முருகன் என்பவர் ‘ஆத்தூர் தொகுதியில் எங்கள் அமைச்சரை எதிர்த்து நிற்கும் தவெக வேட்பாளர் டெபாசிட் வாங்கினால் நான் சேலை கட்டிக்கிறேன்... இல்லைனா நீங்க?’ என போஸ்டர் ஒட்டி பிரளயத்தைக் கிளப்பினார். ஆனால், சோஷியல் மீடியாவில் வேல்முருகனின் அந்த போஸ்டரையும் போட்டு ‘ஐ ஆம் வெயிட்டிங்’ என விஜய் குரலையும் சேர்த்து வைரலாக்கினார்கள் விஜய் கட்சியினர்.
இதையடுத்து என்ன நடந்ததோ யார் கண்டித்தார்களோ தெரியவில்லை... இதுகுறித்து நம்மிடம் பேசிய திண்டுக்கல் மத்திய மாவட்ட தவெக செயலாளர் தேவா, “அடுத்தவர்களை சீண்டிப் பார்க்கும் விதமாக அரசியல் செய்யக்கூடாது. யாரையும் தரக்குறைவாக விமர்சிக்கவும் கூடாது என எங்கள் தலைவர் சொல்லியுள்ளார். அந்தப் போஸ்டரில் எங்களுக்கு உடன்பாடில்லை. அதனால் போஸ்டர் ஒட்டிய எங்கள் கட்சியினரை கண்டித்ததுடன், தலைவரின் கொள்கை வழி நடக்கும்படி அறிவுரை சொல்லி இருக்கிறோம்.
திமுக தரப்பிலும் தவெக-வுக்கு எதிராக போஸ்டர் ஒட்டியவரை மாவட்ட நிர்வாகிகள் கண்டித்ததாக அறிந்தேன். ஆனால், அதற்காக எங்கள் களப்பணி நிற்காது. ஆத்தூர் தொகுதி முழுவதும் மக்களை சந்தித்து வருகிறோம். ஆத்தூர் தொகுதியில் தவெக இம்முறை நிச்சயம் வெற்றி பெறும் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூறமுடியும்” என்றார்.
திமுக சைடியில் போஸ்டர் ஒட்டிய ஆத்தூர் ஒன்றிய திமுக இளைஞரணி துணை அமைப்பாளரான வேல்முருகனோ, “ஒரு சீனியர் அமைச்சரை, பல தேர்தல்களை கண்டவரை இன்னும் தேர்தலையே சந்திக்காதவர்கள் எதிர்த்து வெற்றி பெறுவது என்பது சாத்தியமில்லை. ஆனால், விளம்பரத்திற்காக எங்களுக்கு சவால் விடும் வகையில் போஸ்டர்களை அடித்து ஒட்டினார்கள். அதற்கு பதிலடி கொடுக்கவே நானும் அப்படி போஸ்டர் அடித்து ஒட்டினேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT