Published : 13 Aug 2025 10:16 AM
Last Updated : 13 Aug 2025 10:16 AM
தமிழகத்தில் திடமாக காலூன்ற முடியாவிட்டாலும் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ரங்கசாமி தயவுடன் கடந்த முறை கூட்டணி ஆட்சியில் இடம்பிடித்தது பாஜக, இந்தத் தேர்தலிலும் அதை தக்கவைக்க அவசர கதியில் கட்சியை சீரமைத்து வருகிறது அந்தக் கட்சி.
புதுச்சேரியில் 2001-ல் தான் பாஜக தனக்கான கணக்கைத் தொடங்கியது. அப்போது. பாஜக-வை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வெற்றிபெற்றார். அதன் பிறகு பாஜக புதுச்சேரியில் பெரிதாக சோபிக்கவில்லை. இந்த நிலையில், 2016-ல் மீண்டும் புதுச்சேரி அரசியலில் தனக்கான கணக்கைத் தொடங்கியது பாஜக அப்போதும் மத்தியில் பாஜக ஆட்சியே இருந்ததால் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி பாஜக-வைச் சேர்ந்த 3 பேரை நியமன எம்எல்ஏ-க்களாக நியமித்தார்கள். ஆனால், அப்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் நியமன எம்எல்ஏ-க்கள் பேரவைக்குள் நுழைவதற்கே பெரும் பாடுபட வேண்டி இருந்தது.
இந்த நிலையில், 2021 சட்டப்பேரவைத் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் பாஜக-வுக்கு குடிபெயர்ந்தனர். இதனால் காங்கிரஸ் கட்சியே ஆட்டம் கண்டது. பாஜக-வுக்கு திடீர் மவுசு ஏற்பட்டது. இதையடுத்து, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது பாஜக. அந்தத் தேர்தலில் பாஜக-வுக்கு முதல் முறையாக 6 எம்எல்ஏ-க்கள் கிடைத்தார்கள். அதைவைத்து கூட்டணி ஆட்சிக்கு அடித்தளம் போட்டது பாஜக. அதன்படியே மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி அமைந்தது.
ஆட்சி அதிகாரத்தில் பாஜக பங்கெடுத்த அதேசமயம், கட்சிக்குள் மனஸ்தாபங்கள் வெடிக்க ஆரம்பித்தன. காலம் காலமாக கட்சியில் இருப்பவர்கள், புதிதாக வந்து ஒட்டிக்கொண்டவர்கள் என புதுச்சேரி பாஜக-வில் இரண்டு கோஷ்டிகள் முளைத்தன. புதியவர்கள் வந்து அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டதால் பழையவர்களுக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டுக் கிளம்பியது.
இந்தக் குறையைப் போக்கி இரு தரப்பையும் ஒருங்கிணைக்கும் பணியிலும் யாரும் ஈடுபடவில்லை. இதனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களும் தங்களுக்கான தேவைகளைப் கேட்டுப் பெறமுடியாமல் சோர்ந்து போனார்கள். விளைவு, புதுச்சேரியில் ஆளும் கூட்டணியில் இருந்தும் 2024 மக்களவைத் தேர்தலில் தோற்றுப் போனது பாஜக. அப்போதும் தோல்விக்கான காரணத்தை அலசி ஆராய்ந்து உடனடியாக மாற்றத்துக்கான வழிகளை காணவில்லை பாஜக.
இதனால் கட்சிக்குள் கோஷ்டி பூசல் மேலும் அதிகரித்தது. பாஜக எம்எல்ஏ-க்கள் தன்னிச்சையாக செயல்பட்டதுடன், கட்சி விழாக்கள், நிகழ்ச்சிகளை புறக்கணிக்கத் தொடங்கினர். பாஜக எம்எல்ஏ-க்கள், பாஜக ஆதரவு சுயேச்சைகளும் கூட்டணி சேர்ந்து லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகள் ஜோஸ் சார்லஸை கூட்டி வந்து மக்களுக்கு நல உதவிகளை வழங்கி புதிதாக ஒரு ரூட்டைப் போட்டார்கள். இதில் சிலரது நடவடிக்கைகள், இவர்களெல்லாம் இனியும் பாஜக-வில் நீடிப்பார்களா என்று சந்தேகப்படுமளவுக்கு மாறிப்போனது.
பிரச்சினையை இவ்வளவு தூரம் வளரவிட்டுவிட்டு இப்போது லேட்டாக சோம்பல் முறித்து கட்சியை புனரமைக்கத் தொடங்கி இருக்கிறது பாஜக. டெல்லி உத்தரவை அடுத்து அவசர அவசரமாக 3 நியமன எம்எல்ஏ-க்களும் அமைச்சர் சாய் ஜே.சரவணன் குமாரும் அண்மையில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தார்கள். இதையடுத்து அதிருப்தியில் இருந்த ஜான்குமார் அமைச்சரானார். காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகர், முன்னாள் எம்எல்ஏ-வான தீப்பாய்ந்தான், பாஜக மூத்த நிர்வாகியான செல்வம் ஆகியோர் நியமன எம்எல்ஏ-க்களாக பொறுப்பேற்றனர்.
ஆனாலும் பிரச்சினை ஓய்ந்த பாடில்லை. பட்டியலினத்தைச் சேர்ந்த சாய் ஜே.சரவணன் குமாரை அமைச்சரவையிலிருந்து நீக்கியதை சிலர் சர்ச்சையாக்கி வருகிறார்கள். அவரும், அரசு அலுவலகங்களுக்கு சென்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பி வருகிறார். இதனிடையே, பாஜக புதிய நிர்வாகிகள் நியமனத்திலும் மேல்மட்ட தலைவர்கள் தங்களின் விசுவாசிகளுக்கே பதவிகளை அளித்துள்ளதால், தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக கட்சியில் காலம் காலமாக இருப்பவர்கள் புகார் வாசிக்கிறார்கள்.
சாய் ஜே.சரவணன் குமார் அதிருப்தியில் இருப்பதாகச் சொல்கிறார்களே என அமைச்சர் நமச்சிவாயத்திடம் கேட்டதற்கு, “அவருக்கு எந்த அதிருப்தியும் இல்லை. ஆனால், வருத்தம் இருக்கலாம். இருந்த போதும் கட்சியின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்று வருகிறார்” என்றார்.
புதுச்சேரி மாநில பாஜக-வுக்குள் புகைச்சல் இருப்பது குறித்து புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கத்திடம் கேட்டதற்கு, “பாஜக-வில், உழைப்பவர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். கட்சித்தலைமையின் அறிவுறுத்தல்படி புதிய நிர்வாகிகளை நியமித்து வருகிறோம். கட்சிக்காக பாடுபட்டவர்களுக்கு உரிய அங்கீகாரம் அளிக்கப்படும். கட்சிக்குள் இருக்கும் சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்து அனைவரும் ஒருமித்து செயல்பட்டு மீண்டும் தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தை தக்கவைப்போம்” என்றார்.
பாஜக தலைவர்கள் இப்படிச் சொன்னாலும் பாஜக தலைமை மீது அதிருப்தியில் இருக்கும் முதல்வர் ரங்கசாமி என்ன கணக்குப் போட்டு வைத்திருக்கிறார் என்று யாருக்குத் தெரியும்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT