Published : 13 Aug 2025 07:53 AM
Last Updated : 13 Aug 2025 07:53 AM
மதுரை: தமிழகம் முழுவதும் பொது இடங்களில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள், பேனர்களை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாகை மாவட்டத்தை சேர்ந்த அருளரசன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அரசியல் கட்சிகள் சார்பில் ஏராளமான பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகள் வைக்கப்படுகின்றன. எந்த அனுமதியும் பெறாமல் வைக்கப்படும் போர்டுகளால், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
பேனர்கள், அலங்கார வளைவுகளை அகற்ற வேண்டியது அதிகாரிகளின் கடமையாகும். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே, அனுமதி பெறாமல் பொதுப்பாதைகள், நடைபாதைகள் மற்றும் சாலையோரங்களில் அமைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் போர்டுகள் உள்ளிட்டவற்றை அகற்றவும், அவற்றை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், “பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் வைப்பதை முறைப்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்றம் ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவுகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: அனுமதி பெறாத பிளக்ஸ் போர்டு, பேனர்கள் விவகாரத்தில் ஏற்கெனவே உயர் நீதிமன்ற உத்தரவுகள் உள்ளன. அப்படியிருக்கும்போது நீதிமன்றம் மீண்டும் மீண்டும் உத்தரவு பிறப்பிக்க முடியாது. அதிகாரிகள் அவர்களின் கடமையை செய்ய வேண்டும் என்றே நீதிமன்றம் விரும்புகிறது.
நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பிறகு அதிகாரிகள் பணியை செய்தால், அவர்கள் ஏன் ஊதியம் பெறுகிறார்கள்? அதிகாரிகள் தங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும்.
அதிகாரிகள் மீது நடவடிக்கை: பொது இடங்களில் விதிகளை மீறி அச்சுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பேனர்கள், அலங்கார வளைவுகள், பிளக்ஸ் போர்டுகளை அகற்ற காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகள், நகராட்சி, மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள் விழுந்து அசம்பாவிதம் நிகழ்ந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மக்கள் வரிப்பணத்தில் இருந்து ஊதியம் பெறும் அரசு அலுவலர்கள், தங்கள் கடமையை முறையாக, பொறுப்புடன் செய்ய வேண்டியது அவசியம். எனவே, மக்களுக்கு அச்சுறுத்தல், ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருக்கும் பிளக்ஸ் போர்டுகள், பேனர்கள், அலங்கார வளைவுகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பாக நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT