Published : 13 Aug 2025 05:28 AM
Last Updated : 13 Aug 2025 05:28 AM
சென்னை: வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணி தோல்வியடையும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் பாஜக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குப் பிறகு நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றினர்.
பெண்களுக்கு ரூ.1,000 தருவோம் என 2021-ல் அறிவித்துவிட்டு, மக்களவைத் தேர்தல் வரும் போதுதான் கொடுத்தனர். இப்போது மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளை திமுகவுக்கு வேலை வாங்குகின்றனர். தாய்மொழிக் கல்வி, தமிழ் மொழி என்று எல்லாம் பேசுகின்றனர்.
207 பள்ளிகளை மூடி இருக்கின்றனர். தமிழக பள்ளி மாணவர்களின் கல்வித்திறன் பின்னோக்கி போய் கொண்டிருப்பதாக ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு. அங்கு பாஜவினர் யாரும் இல்லை.
சாதிய படுகொலை மட்டுமே தமிழகத்தில் நடக்கிறது. நாள் ஒன்றுக்கு நான்கு, ஐந்து படுகொலைகளாவது மாவட்டத்தில் இல்லாமல் இல்லை. அதற்கு காரணம் சட்டம் ஒழுங்கு சரி இல்லை. போதை பொருட்கள் பயன்பாடு அதிகமாகிவிட்டது. எல்லா இடங்களிலும் கஞ்சா. இன்றைக்கு விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான கஞ்சா பிடிபட்டுள்ளது. காவல்துறை சரியாக செயல்படுவதில்லை.
ஆட்சிக்கு வந்து எத்தனை ஆண்டு ஆகிவிட்டது, இப்போது வந்து தாயுமானவர் திட்டத்தை தொடங்க வேண்டிய அவசியம் என்ன, இதை தொடக்கத்திலேயே செய்திருக்கலாமே. இன்றைக்கு திமுகவினர் தோல்வி பயத்தில் இருக்கின்றனர். அதனால் இதை எல்லாம் அவர்கள் செய்கின்றனர். நிச்சயம் அவர்கள் கூட்டணி 200 இடங்களில் தோற்கும். அதில் சந்தேகமே இல்லை. தோல்வி பயத்தால் எல்லா திட்டங்களையும் திமுகவினர் அறிவித்துக் கொண்டே இருக்கின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர், நாகர்கோவில் ஆகிய மக்களவைத் தொகுதிகளின்கீழ் 30 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளை தவிர்த்துவிட்டு ஆக.17-ம் தேதி 28 தொகுதிகளில் பூத் கமிட்டி மாநாடு ஏற்பாடு செய்து இருக்கிறோம்.
இதை தொடர்ந்து கோவை, மதுரை, திண்டிவனம், சென்னை போன்ற இடங்களில் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும். கூட்டணியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை இணைப்பது பற்றி பிறகு பேசலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT