Last Updated : 12 Aug, 2025 07:36 PM

 

Published : 12 Aug 2025 07:36 PM
Last Updated : 12 Aug 2025 07:36 PM

“விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றியே ‘தாயுமானவர்’ திட்டம்” - பிரேமலதா பெருமிதம்

படம் : எஸ்.குரு பிரசாத்

சேலம்: தாயுமானவர் திட்டம் மூலம் வீடுகளுக்கேச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் திட்டம் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி, இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு தேமுதிக சார்பில் நன்றி தெரிவிப்பதாக அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சேலத்தில் தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ எனும் பூத் முகவர்களுடன் நேரடி சந்திப்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. தேமுதிக சேலம் மாநகர் மாவட்டம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜய காந்த், தேமுதிக பொருளாளர் சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் மோகன்ராஜ், மாநகர் மாவட்டச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மண்டல தேர்தல் பணி பொறுப்பாளர் இளங்கோவன் உள்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த் கூறியது: "ரேஷன் பொருட்கள் வீடு வீடாக கொண்டு சென்று வழங்கப்படும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என்று அப்போது பலர் தெரிவித்தனர். தற்போது, தாயுமானவர் திட்டம் மூலம் ரேஷன் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்குகின்றனர். இது விஜயகாந்துக்கு கிடைத்த வெற்றி. இத்திட்டத்தை செயல்படுத்திய தமிழக முதல்வருக்கு தேமுதிக சார்பில் நன்றி.

வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன. தேர்தலில் முறைகேடுகள் நடப்பது உண்மை. இது குறித்து 20 ஆண்டுகளுக்கு முன்னரே நாங்கள் தெரிவித்துள்ளோம். விருதுநகர் தொகுதியில் இதுபோன்று நாங்கள் பாதிக்கப்பட்டோம். எனவே, ஜனநாயக முறைப்படி நேர்மையாக தேர்தல் நடைபெற்றால் வரவேற்போம்.

அரசியல் ரீதியாக பெண் ஆளுமை எனும் விருது எனக்கு வழங்கப்பட்டது. ஏற்கெனவே, அரசியலில் பெண் ஆளுமையாக இருந்தவர் ஜெயலலிதா. எனவே, எங்கள் இருவரையும் ஒப்பிட்டு சமூக வலைதளங்களில் போட்டோ பகிரப்பட்டதை, பொருளாளர் சுதீஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்தார். அரசியலில் என்னுடைய ரோல் மாடல் ஜெயலலிதாதான்.

தேமுதிகவுடன் கூட்டணியில் இருப்பவர்கள் விஜயகாந்தின் போட்டோவை பயன்படுத்தலாம். எம்ஜிஆரை தனது மான சீக குரு என கேப்டன் அறிவித்தது போல, தவெக தலைவர் விஜய்யும், தனது மான சீக குரு என்று விஜயகாந்தை அறிவித்தால், அவரது போட்டோவை பயன்படுத்தலாம். ஆட்சியில் பங்கு என்பதை தேமுதிக வரவேற்கிறது.

கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தும்போது, ஆட்சியில் பங்கு தேவை என்பதையும் வலியுறுத்துவோம். விஜயகாந்த் உடல்நலன் பாதிக்கப்பட்டு இருந்தபோது, ஸ்டாலின் நேரில் நலம் விசாரித்தார். அதேபோல முதல்வர் பதவி ஏற்கும்போது ஸ்டாலின், உதயநிதி ஆகியோர் விஜயகாந்த்தை சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.

எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தவர் கருணாநிதி. அதனால் எங்கள் குடும்பத்துக்கும், அவர்கள் குடும்பத்துக்கும் நல்ல நட்பு உண்டு. எனினும், அரசியல் வேறு, குடும்ப நட்பு வேறு. தமிழகத்தின் 234 தொகுதியிலும் தேமுதிகவை வளர்ப்பதே எங்கள் நோக்கம். தேமுதிக மாநாட்டின்போது, தேர்தல் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்” என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x