Last Updated : 11 Aug, 2025 09:06 PM

1  

Published : 11 Aug 2025 09:06 PM
Last Updated : 11 Aug 2025 09:06 PM

“அதிமுக ஆட்சி அமைந்ததும் மா விவசாயிகளுக்கு விடிவுகாலம்!” - கிருஷ்ணகிரியில் இபிஎஸ் உறுதி

படங்கள்: கி.ஜெயகாந்தன்

கிருஷ்ணகிரி/ஓசூர்: அதிமுக ஆட்சி அமைந்ததும், மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும் என அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, ”மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அவரது 3-ம் கட்ட சுற்றுப்பயணம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கியது. ராயக்கோட்டை அண்ணா சிலை அருகில் திறந்த வாகனத்தில் பேசிய அவர் கூறியது: “மலர் விவசாயிகளுக்காக, ஓசூரில் ரூ.20 கோடி மதிப்பில் சர்வதேச பன்னாட்டு மலர் ஏல மையத்தை, அதிமுக ஆட்சியில் திறந்து வைத்தோம். ஆனால், அந்த ஏல மையத்தை திமுக அரசு மூடி வைத்துள்ளது.

நடப்பாண்டில் மா மகசூல் அதிகரித்து கடும் விலை வீழ்ச்சியடைந்தது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கவும், 'மா'விற்கான கொள்முதல் விலையை கிலோவிற்கு ரூ.13 நிர்ணயம் செய்ய வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினோம். ஆனால், திமுக அரசு கண்டுக் கொள்ளவில்லை. அதிமுக ஆட்சியில் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளுக்கு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

தற்போது விவசாயத்துக்கு சூழற்சி முறையில் மும்முனை மின்சாரம் வழங்குகின்றனர். திமுக ஆட்சியில் விவசாயிகள் படும் துன்பங்கள், துயரங்களை கண்டு கொள்வதில்லை. அதிமுக ஆட்சி அமைந்ததும், மா விவசாயிகளுக்கு விடிவுகாலம் பிறக்கும், 24 மணி நேரமும் விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

அனைத்து ஏழைகளுக்கு, பட்டியல், பழங்குடியின மக்களுக்கும் கான்கீரிட் வீடுகள் கட்டித் தரப்படும். குறிப்பாக வீட்டுமனை இல்லாவிட்டாலும், இடம் வாங்கி கான்கீரிட் வீடுகளை கட்டி தருவோம்.

விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர் கடன்களை அதிமுக ஆட்சியில் தள்ளுபடி செய்தோம். 5 ஆண்டுகளில் 2 முறை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. ஒவ்வொரு தீபாவளி பண்டிகைக்கும் தாய்மார்களுக்கு தரமான சேலைகள் வழங்குவோம். மக்களின் எண்ண ஓட்டப்படி அதிமுக அரசு இருக்கும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு தோல்வி பயம்: தேன்கனிக்கோட்டை பிரச்சாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, ”நான் பஸ் எடுத்து கொண்டு புறப்பட்டதால், ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார். தேன்கனிக்கோட்டையில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தை பார்த்தால், அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றாலும், சென்று விடுவார். அதிமுக - பாஜக கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதற்கு மக்களே சாட்சி. திமுக கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது.

அதிமுக - பாஜக கூட்டணி மக்களை நம்பி உள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலில் திமுக 200 இடங்களில் வெல்லும் என ஸ்டாலின் பொய் பேசுகிறார். ஆனால், அதிமுக - பாஜக கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். மத்திய அரசுடன் இணைக்கமாக இருந்து அதிமுக அற்புதமான ஆட்சி செய்து, தமிழகம் ஏற்றம் பெற்றது. எடப்பாடி பழனிசாமி மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் என ஸ்டாலின் கூறுகிறார்.

1999-ம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்து திமுக வெற்றி பெற்றது. பாஜக கூட்டணியில் திமுகவிற்கு ஆட்சி, அதிகாரத்தில் இடம் கொடுத்தால் அது நல்ல கட்சி. அதிமுக கூட்டணி வைத்தால் அவதூறாக பேசுவது நியாயமா. ஊழல் நிறைந்த திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்கிற ஒத்த கருத்துடன் அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துள்ளது. திமுக, அதன் கூட்டணி கட்சிகள் பயத்தின் காரணமாக வேண்டும் என்றே, திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்” என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ, மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, முன்னாள் அமைச்சர் கள் கே.பி.அன்பழகன், பாலகிருஷ்ணரெட்டி, அதிமுக, பாஜகவினர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x