Published : 11 Aug 2025 04:53 PM
Last Updated : 11 Aug 2025 04:53 PM
சென்னை: ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடைபெறுவது உறுதி செய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தலை வலியுறுத்தியும், பிஹார் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் டெல்லியில் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து தலைமைத் தேர்தல் ஆணையம் நோக்கி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் ஊர்வலமாகச் சென்ற நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டது கடும் கண்டனத்துக்கு உரியது.
கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற "எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்" புத்தக வெளியீட்டு விழாவில் பேசியபோது, “நம் நாடு முழு வளர்ச்சியை அடைய வேண்டும் என்றால் ஜனநாயகம் காக்கப்பட வேண்டும். அப்படி ஜனநாயகம் காக்கப்பட வேண்டும் என்றால் அரசியலமைப்புச் சட்டம் காக்கப் பட வேண்டும். அதற்கான பொறுப்பும் கடமையும் நம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். ஜனநாயகத்தின் ஆணிவேர் சுதந்திரமான மற்றும் நியாயமானத் தேர்தல்” (Free and Fair Election) என்று அப்பொழுதே ஆணித்தரமாகத் தெரிவித்திருந்தோம். அத்துடன், தேர்தல் ஆணையர்கள் ஒருமித்த கருத்தோடு தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தோம்.
மேலும், பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானதும், அந்த நடைமுறையானது ஜனநாயக உரிமைகளைக் கேள்விக்குறியாக்கும் என்று, தமிழ்நாட்டில் இருந்து தமிழக வெற்றிக் கழகம்தான் முதன்முதலாகக் குரல் எழுப்பியது. ஏற்கெனவே, நாம் கூறியது போல, அனைவருக்கும் நம்பிக்கை ஏற்படும் விதமாக, ஜனநாயகத்தைக் காக்கும் வகையில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் (Free and Fair Election) நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று விஜய் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT